தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன் இந்திய அரசால் தயாரித்து வழங்கப்பட்ட புகையிலை எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தை கிண்டல் செய்யும் விதமாக கார்த்தி நடித்துள்ள ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சியை நீக்குமாறு புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பும் சென்சார் போர்டும் அந்தப்படத்தின் இயக்குனர் ராஜேஸுக்கு கோரிக்கை வைத்தன.
தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியானது. அதில் தியேட்டரில் படம் பார்க்க அமர்ந்திருக்கும் கார்த்தியிடம், சந்தானம் புகையிலை தடை குறித்து தியேட்டர்களில் காட்டப்படும் விளம்பரத்தில் வரும் முகேஷ் என்ற நபரைப்பற்றி கிண்டலடிக்கும் விதமாக ஒரு காட்சி இடம்பெறுவதை பார்த்திருப்பீர்கள். அதைத்தான் இப்போது நீக்குமாறு சென்சார் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்சாரின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டார் இயக்குனர் ராஜேஸ். மேலும் “படத்தில் ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கென்றே பல காட்சிகள் இருப்பதால் இந்த ஒரு காட்சியை நீக்குவது குறித்து கவலைப்படவில்லை” என்கிறார் ராஜேஸ். இந்தப்படத்திற்கு சென்சார்போர்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.