நண்பனை மச்சான் என அழைக்கும் அமல் அவனது தங்கை சரண்யா மோகனை திருமணம் செய்யபோவதாக சவால் விடுகிறார். முறைமாமன் வில்லனாக குறுக்கே நிற்கிறான். சவாலில் அமல் ஜெயித்தாரா? சரண்யா மோகனை திருமணம் செய்ததது யார்? முடிவை வெண்திரையில் காண்க.
குடும்பத்துக்குள்ளே நடக்கும் கலகலப்பான கதை. அதை அங்கே இங்கே என கொஞ்சம் சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டிருக்கிறார்கள். புதுமுகம் அமல் பார்க்க அமுல்பேபி மாதிரி இருக்கிறார். ஆனால் நடிப்பு தான் அவரைவிட்டு எட்டவே நிற்கிறது.
படத்தில் பளிச்சென நம்மை கவர்வது சரண்யா மோகனும் அவரது அக்காவாக வரும் தேவதர்ஷினியும் தான். தங்கையாகவே நாம் பார்த்துப் பழகிய சரண்யாமோகன் இதில் கதாநாயகியாக தன் துறுதுறு நடிப்பால் நம்மை அசத்துகிறார். சீரியசான நேரத்தில் அடை அவியல் கேட்கும் தேவதர்ஷினியின் காமெடி சிரிக்கவைக்கிறது. இன்னொரு பக்கம் கஞ்சா கருப்பு, மனோபாலா இருவரும் தங்கள் பங்கிற்கும் முயற்சித்திருக்கிறார்கள். முறைமாமனின் நண்பனாக வருபவரின் காமெடி அதிர்வெடி ரகம்.
பரணியின் இசையா இது என கேட்கவைக்கிறது பாடல்கள். அழுத்தமில்லாத கதை, விறுவிறுப்பில்லாத திரைக்கதை, செயற்கைத்தனமான கதாபாத்திரங்கள் என பல விஷயங்கள் படத்தை கோலாகலமாக கொண்டாட விடாமல் தடுக்கின்றன.
படத்தை தானே சொந்தமாக தயாரித்து இயக்கியுள்ள பி.ஜி.சுரேந்திரன் ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம்.