கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ பட துவக்கவிழா நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் ஒருசில ஆச்சர்யமான நிகழ்வுகளை நாம் பார்க்க முடிந்தது. இந்த விழாவிற்கு முதல் ஆளாக வருகை தந்தவர் சத்யராஜ் தான். சில மாதங்களுக்குமுன் வெளியான அமைதிப்படை இரண்டாம் பாகமான ‘நாகராஜ சோழன்’ எம்.ஏ…எம்.எல்.ஏ படத்தில், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததைப் பற்றியும் அவர் சட்டசபையில் பேசிய விதத்தையும் இரண்டு காட்சிகளில் கிண்டல் செய்து நடித்திருந்தார் சத்யராஜ்.
ஆனால் இன்றைய விழாவில் முதல் ஆளாக சத்யாராஜ் கலந்துகொண்டதுடன் கேப்டனும் அவரும் மிகவும் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்த காட்சி அவர்களது நாற்பது ஆண்டுகால நட்பை பறைசாற்றியதுடன் சினிமா வேறு, சினிமவைத்தாண்டிய நட்பு வேறு என்பதை இருவருமே நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தியது.
அடுத்ததாக நகைச்சுவை நடிகர் மயில்சாமியை மேடைக்கு அழைத்து அமரவைத்து கௌரவித்தனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மயில்சாமி நடிக்கவந்து 25 வருடங்கள் ஆகியும் இன்னும் கேப்டனின் படம் ஒன்றில் கூட இதுவரை அவருடன் வருகிறமாதிரி சேர்ந்து நடித்ததில்லை என்ற ஆதங்கத்தையும் வெளியிட்டார்.
இளையதிலகம் பிரபுவுடன் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களான கார்த்தி, விக்ரம் பிரபு இருவரும் நேரில் வந்து சண்முகப்பாண்டியனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். கேப்டனின் திரையுலக குரு எஸ்.ஏ.சி இந்த விழாவில் கலந்துகொண்டு அறிமுக நாயகன் சண்முகப்பாண்டியனை வாழ்த்தியதோடு அவரது தந்தையிடமிருந்து என்னவெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டும் என சில அறிவுரைகளையும் வழங்கியது முத்தாய்ப்பாக இருந்தது.