ஜில்லா – விமர்சனம்

113

பெயர்: சிவன் (மோகன்லால்)
தொழில்: மதுரையையே கதிகலங்க வைக்கும் தாதா, தன்னை எதிர்க்கும் ஆளை தரைமட்டம் ஆக்குவது
நோக்கம்: தனக்கு குடைச்சல் கொடுக்கும் கமிஷனரை சமாளிக்க வளர்ப்பு மகனை போலீஸ் ஆக்குவது

பெயர்: சக்தி (விஜய்), சிவனின் வளர்ப்பு மகன்
தொழில்: இடைவேளை வரை ரௌடி, இடைவேளைக்கு முன் ரௌடி போலீஸ், இடைவேளைக்கு பிறகு நல்ல போலீஸ்
நோக்கம்: தந்தைக்கு உதவியாக அடிதடி செய்தல், போலீஸை வெறுப்பது, அப்பாவின் விருப்பத்திற்காக போலீஸ் ஆக மாறுவது, போலீஸ் ஆனபின் பொறுப்பை உணர்ந்து தந்தையின் தவறை திருத்தி அவரை நல்லவராக மாற்றுவது.

நடந்தது என்ன?: தந்தை மகனுக்கு இருக்கும் கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி அவர்களுக்குள் கலகத்தீ மூட்டுகிறது ஒரு கறுப்பு ஆடு. ஆனால் அந்த வஞ்சக சூழ்ச்சிக்கு அந்த கறுப்பு ஆடே பலியாகிறது.

அதிரடி சண்டைகளில் சிக்ஸர் அடிக்கிறார் விஜய். தந்தை மகன் சவால் விடும் காட்சிகளில் விஜய்யும் மோகன்லாலும் சீறும் காட்சிகளில் சுறுசுறுப்பு. அதிலும் போலீஸானவுடன் அவரது தெனாவெட்டான நடிப்பிற்கு ஒவ்வொரு காட்சியிலும் கைதட்டல் காதைக் கிழிக்கிறது. மதுரை தாதாவாக கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் லாலேட்டன். படம் முழுக்க அவர் வந்தாலும் கூட ஏதோ ஒன்று அவரிடம் மிஸ்ஸிங் ஆகிறது.

சிரிப்பு போலீஸாக காஜல், கூடவே விஜய்யுடன் காதல். நடிக்க வாய்ப்பு குறைவு. ஆனாலும் காமெடியில் கலக்குகிறார். அதிகம் பேசாமல் அளந்து வாசித்திருக்கிறார் சூரி கூடவே இருந்து கழுத்தறுக்கும் சம்பத்தின் கச்சிதமான நடிப்பு, அம்மாவாக பாசம் காட்டும் பூர்ணிமா, மாமாவாக வரும் தம்பி ராமையா என யாருமே குறைசொல்லமுடியாத நடிப்பை தந்திருக்கிறார்கள்.

அட.. நேர்மையான போலீஸ் அதிகாரியாக பிரதீப் ராவேத், ஆச்சர்யம்.. ஆனால் கச்சிதம். ஆர்.கே.வின் திடீர் பிரவேசம் வந்த வேகத்தில் முடிந்துவிடுவது ஏமாற்றம் தான். அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.

‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடலின் மூலம் தன் இருப்பை பதிவு செய்கிறார் இசையமைப்பாளர் இமான். படத்தின் நீளத்தை நன்றாகவே குறைத்திருக்கலாம். இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். லாஜிக் என்ற ஒன்றை மறந்துவிட்டு பார்த்தால் விஜய் படத்திற்கு தேவையான மசாலாக்களை சரிவிகிதத்தில் கலந்து மசாலா பொங்கலாக படைத்திருக்கிறார் இயக்குனர் நேசன்.

Leave A Reply

Your email address will not be published.