கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த மாதம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த மோகன்லாலுக்கு புது தெம்பையும் அளித்திருக்கிறது. மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கியுள்ளர்.
படம் வெளியான சில நாட்களிலேயே இந்தி உட்பட மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் உரிமை எதிர்பாராத ஒரு தொகைக்கு விற்பனை ஆகியிருக்கிறது. இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு கதையிலும் மோகன்லாலின் நடிப்பிலும் மனதைப் பறிகொடுத்துள்ள விக்ரம் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.
நம்மவர்கள் கருத்து, விருப்பம் என்று மெதுவாக இருக்க, தெலுங்கில் விக்டரி வெங்கடேஷ் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க அக்ரிமெண்ட்டே போட்டு முதல் ஆளாக களம் இறங்கிவிட்டார். கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான ‘பாடிகார்டு’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து ஹிட் கொடுத்தவர்தான் வெங்கடேஷ். சுரேஷ் பாபு இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்த ‘த்ரிஷ்யம்’ வெங்கடேஷுக்கு இன்னொரு ‘பாடிகார்டு’ ஆக வெற்றியைத் தரும் என்று நம்புவோம்.