வரிசையாக ஹிட் படங்கள் தான். அப்புறம் ‘ரம்மி’ மட்டும் விஜய் சேதுபதியை கைவிட்டுவிடுமா என்ன? விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ரிலீஸுகு தயாராக இருக்கும் படம் தான் ‘ரம்மி’. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் அக்-25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. லிங்குசாமியிடம் உதவியாளராக பணிபுரிந்த பாலகிருஷ்ணன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ‘ஆனந்தம்’, ‘மௌனகுரு’ மற்றும் ‘நான் மகான் அல்ல’ படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தும் இருக்கிறார்.
இந்தப்படம் பற்றி பாலகிருஷ்ணன் கூறும்போது,”விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர், சூரி மூவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் மலரும் நட்பு, காதல், குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காதலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ரம்மி ஆடும்போது வெற்றி முதல் சீட்டிலும் வரும், கடைசி சீட்டிலும் வரும். அதைப்போல் இவர்களின் வெற்றி எப்படி அமைகிறது என்பதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்கிறார்.
பெருமளவில் தனியார் கல்லூரிகள் உருவாகாத 1987ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக ‘ரம்மி’யை உருவாக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணன். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த காயத்ரி தான் ஹீரோயின் இன்னொரு ஹீரோயினாக ஐஸ்வர்யா நடிக்கிறார். ‘சுந்தரபாண்டியன்’ படத்துக்குப் பின்பு விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகரன், புரோட்டா சூரி மூவரும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். டி.இமான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.