அஜீத்திற்கு மீண்டும் தூது அனுப்பிய கௌதம் மேனன்?

101

சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் காக்க காக்க, ‘வாரணம் ஆயிரம்’ என மறக்க முடியாத இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். அதிலும் சூர்யா வளர்ந்துவந்த நேரத்தில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படம், சூர்யா சினிமாவின் இன்னொரு தளத்தில் அடியெடுத்து வைக்கவும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறவும் உதவியதை மறக்க முடியாது.. சில மாதங்களுக்கு முன் சூர்யா நடிக்க துருவ நட்சத்திரம் என்ற படத்திற்கு பூஜை போட்டார் கௌதம். ஆனால் சில காரணங்களை வெளிப்படையாக கூறி அந்தப்படத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார் சூர்யா.

ஏற்கனவே அஜீத்தை வைத்து ‘துப்பறியும் ஆனந்த்’ படத்தை இயக்குவதாக இருந்து ஒரு கட்டத்தில் அது ட்ராப் ஆனது. அதேபோல விஜய்யை வைத்து ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ என்ற படத்தை ஆரம்பித்தார். ஆனால் அதிலிருந்து விஜய்யும் விலகிக்கொண்டார். இப்படி டாப்ஸ்டார்கள் மூன்றுபேருமே இவர் டைரக்ஷனில் நடிக்க ஆர்வப்பட்டு வந்து, படம் ஆரம்பிக்கும் முன்னரே விலகிக்கொள்ள காரணம் இவர் யாரிடமும் முழுக்கதையை கூறவில்லை என்பதுதான்.

இப்போது கௌதம் மேனனின் பார்வை மீண்டும் அஜீத் பக்கம் திரும்பியிருக்கிறது. சூர்யா, விஜய் இருவரும் கைவிட்டுவிட்ட இந்த சூழ்நிலையில் அஜீத் கைகொடுத்தால் மட்டுமே மீண்டும் தன்னை தமிழ் திரையுலகில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என நம்பும் கௌதம் மேனன் மீண்டும் அஜீத்திற்கு தூது அனுப்பியிருப்பதாக தகவல். அது ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்காகவா அல்லது ‘துப்பறியும் ஆனந்த்’தை தூசி தட்டுவதற்காகவா என தெரியவில்லை.

ஆனால் இவர்கள் இருவர் கூட்டணி அமைந்தால் அது பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அஜீத்தின் ரசிகர்களும் இந்தக்கூட்டணி இணையவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். இன்று நிலவுகின்ற போட்டியான சூழலில், தனது படங்கள் வரிசையாக ஃப்ளாப் ஆகிவரும் இந்த நேரத்தில் கௌதம் மேனனை நம்பி பெரிய ஹீரோக்கள் வருவது என்பது அதிசயமான ஒன்று. இனியாவது கௌதம் மேனன் சுதாரிப்பாரா?

Leave A Reply

Your email address will not be published.