கௌதம் மேனன், தனுஷ் என ஒரு ஸ்டைலிஷான காம்பினேஷனில் வெளியாகியுள்ள இந்தப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கிடப்பில் இருந்து ஒருவழியாக வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் காட்டிய அசுரனை கௌதம் மேனன் எப்படி மாற்றியிருக்கிறார் பார்க்கலாம்..
தனுஷ் படிக்கும் கல்லூரியில் மேகா ஆகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. முதல் பார்வையிலேயே இருவருக்கும் காதல் தொற்றிக்கொள்கிறது. அனாதையான லேகாவை வளர்த்து ஆளாக்கிய அவரது ஸ்பான்சர், மேகாவை நடிக்கவைத்து கோடிகளில் சம்பாதிக்க விரும்புகிறார். மேகாவுக்கு இதில் விருப்பம் இல்லாததால் தனுஷுடன் அவரது ஊருக்கு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிச் செல்கிறார்.
ஆனால் அந்த இடத்தை தேடி கண்டுபிடித்து வரும் அந்த ஸ்பான்சர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறார்.. இனி என்னை தேட வேண்டாம் நடப்பது நடக்கட்டும் என தனுஷிடம் கூறி விட்டுச் செல்லும் மேகா ஆகாஷ் 4 வருடம் கழித்து தனுஷுக்கு போன் செய்து தான் மும்பையில் இருப்பதாகவும் தன்னுடன் தனுஷின் அண்ணன் சசிகுமாரும் இருப்பதாகவும் அவர் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி இருப்பதாக உடனடியாக கிளம்பி வருமாறும் கூறுகிறார்..
நான்கு வருடங்களாக எந்த தொடர்பும் இல்லாமல் விலகியிருந்த காதலியை தேடி செல்வதா..? இல்லை சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்போன அண்ணன் பிரச்சனையில் சிக்கி இருக்கிறான் என்பதால் அவனை காப்பாற்றப் செல்வதா என்று குழம்பினாலும் தனுஷ் மும்பை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பல வருடங்களுக்கு முன்பு காணாமல்போன சசிகுமார் எப்படி மும்பையில் செட்டில் ஆனார்..? ஏன் ஒருமுறை கூட சொந்த ஊருக்கு திரும்பி வரவில்லை..? மேகா ஆகாஷ் சசிகுமாருடன் எந்த வகையில் சம்பந்தப்பட்டார்..?. இவர்கள் இருவரும் இணைந்து எந்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள்..? அதை தனுஷால் தீர்க்க முடிந்ததா என்பதற்கு மீதி படம் விடை சொல்கிறது.
முதல் பாதி முழுக்க எதிர்ப்புக்கு மத்தியில் வளரும் காதல், இரண்டாம் பாதியில் காதலுக்காகவும் அண்ணனுக்காகவும் போராட்டம் என படம் நெடுக தனுஷுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கிறது. அசுரனின் மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்த தனுஷ் தான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு கல்லூரி செல்லும் மாணவ கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் தனுஷ். குறிப்பாக காதல் காட்சிகளில் இன்னும் துள்ளுவதோ இளமை தனுஷ் ஆகவே அதகளம் பண்ணுகிறார்.. சென்டிமெண்ட், ஆக்சன் என மற்ற ஏரியாக்களிலும் குறை வைக்கவில்லை.. தனுஷ் நடித்த ஆக்சன் படங்களிலேயே இதுதான் ஸ்டைலிஷான படம் என்று தாராளமாக சொல்லலாம்..
கதாநாயகியாக மேகா ஆகாஷ்.. பேட்ட படத்தில் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆகிவிட்டதால் இந்த படத்தில் இளமை துள்ளும் அவரது நடிப்பை பார்த்து ரசிப்பதில் நமக்கு எந்த சிரமமும் இல்லை. கூடவே நடிப்பும் நன்றாக வருகிறது. தனுஷுக்கு ஈடுகொடுத்து காதல் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார்.
அண்ணன் கதாபாத்திரத்தில் சசிகுமார்.. கொஞ்ச நேரமே வந்தாலும் நேர்த்தியான நடிப்பு.. இவரது கதாபாத்திரத்திற்கு சஸ்பென்ஸ் வைக்கிறேன் என சில விஷயங்களை இயக்குனர் இருட்டடிப்பு செய்து விட்டதால் இவரது கதாபாத்திரம் குறித்த குழப்பத்துடனேயே இவரை தொடர வேண்டியிருக்கிறது. மேகா ஆகாஷின் ஸ்பான்சராக வரும் செந்தில் வீராசாமி அந்த கதாபாத்திரத்திற்கு வெகு இயல்பாக பொருந்தி நியாயம் செய்திருக்கிறார்.. உண்மையிலேயே அசத்தலான நடிப்பு.. அதுமட்டுமல்ல தனுஷின் அப்பா வேல ராமமூர்த்தி, மும்பை போலீஸ் அதிகாரிகள் என மற்ற கதாபாத்திரங்களும் மிக சரியான தேர்வு..
தர்புகா சிவா எங்கய்யா அடிக்கடி ஓடிப்போய் ஒளிஞ்சுக்கிறீங்க என்று கேட்கும் விதமாக சூப்பரான பாடல்களையும் அருமையான பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். மனோஜ் பரமஹம்சா மற்றும் ஜோமோன் டி.ஜான் இருவரின் ஒளிப்பதிவுமே சென்னை, பொள்ளாச்சி, மும்பை என ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வித பிரமாண்டம் காட்டி இருக்கிறது.
முதல் பாதியில் காதல் காட்சிகளின் நீளத்தை குறைத்து இரண்டாம் பாதியில் பாடல்களின் எண்ணிக்கையிலும் கைவைத்து இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.. சசிகுமார் ஊரை விட்டு ஓடிப்போனவர் நல்ல நிலைக்கு வந்தும் கூட ஏன் தனது குடும்பத்தாரை நேரடியாக பார்க்க வராமல் மறைந்திருந்து பார்க்கிறார் என்பதற்கு சரியான காரணம் சொல்லவில்லை. அதேபோல மிகப்பெரிய போலீஸ் அதிகாரிகளே சாதிக்க முடியாத விஷயத்தை தனுஷ் சாதிப்பது, லாக்கர் சாவி தேடல், குண்டடிபட்டும் கூட மீண்டும் மீண்டும் எழுந்து வருவது, கதையை நகர்த்திச் செல்லும் கௌதம் மேனனின் குரல் என சில அலுப்புத் தட்டும் விஷயங்கள் இருந்தாலும் அதையும் மீறி படம் விறுவிறுப்பாக நகர்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.. சரியான நேரத்தில் வந்திருந்தால் தனுஷுக்கும் கவுதம் மேனனுக்கும் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்..
Comments are closed.