’ஜன நாயகன்’ விமர்சனம்

13

நடிகர்கள் : விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், சுனில், ரேவதி, ஜி. எம். சுந்தர், ஷரத் ரவி, அர்ஷத்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : சத்யன் சூரியன்
இயக்கம் : எச்.வினோத்
தயாரிப்பு : வெங்கட் கே.நாராயணா

தன் வளர்ப்பு மகள் பிரச்சனையை தீர்க்க களத்தில் இறங்கும் விஜய், தான் கொலை செய்ததாக நினைத்த வில்லன் பாபி தியோல் உயிருடன் இருப்பதை அறிந்துக் கொள்வதோடு, எதை தடுக்க அவரை கொலை செய்தாரோ, அதை விட மிகப்பெரிய நாசவேலை திட்டத்தை அவர் செயல்படுத்த முயற்சிப்பதையும் அறிந்துக் கொள்கிறார். அது என்ன ?, அதை விஜய் எப்படி தடுக்கிறார் ? என்பது தான் ‘ஜன நாயகன்’ படத்தின் கதை.

விஜய் தனது துள்ளல் நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்கிறார். ஆனால், அவரது வழக்கமான காதல் குறும்புத்தனமும், காமெடி காட்சிகளும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வளர்ப்பு மகள் மீது அவர் காட்டும் பாசம் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் வெளிப்படுத்தும் நடிப்பு உள்ளிட்ட அனைத்தும் அவரை கொண்டாட வைக்கிறது. நடனக் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கும் விஜய், தளபதி கச்சேரி பாடலில் ஒட்டு மொத்த திரையரங்கையே ஆட வைத்து விடுகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோல் மிரட்டுகிறார். நேர்மையான அதிகாரியாக இருந்து வில்லனாக உருவெடுக்கும் அவருக்கான பிளாஷ் பேக் காட்சிகள் மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

விஜயின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கும் மமிதா பைஜூ, துள்ளல் நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். சித்தா என்று விஜயை செல்லமாக அழைக்கும் காட்சிகளிலும், அவரிடம் இருந்து விலக நினைக்கும் காட்சிகளிலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

காதல் பாடல் மற்றும் காதல் காட்சிகள் இல்லாத நாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டே தனது குறைவான பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

ஜெயிலராக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அரசியல்வாதியாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், கலெக்டராக நடித்திருக்கும் பிரியாமணி, விஞ்ஞானியாக நடித்திருக்கும் நரேன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், விஜயின் அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி, தொழிலதிபராக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர் என அனைவரும் சிறிய அளவில் முகம் காட்டியிருந்தாலும், தங்களது பணியை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாலர் சத்யன் சூரியன் காட்சிகளை கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பவர், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை கிராபிக்ஸ் காட்சிகளின் உதவியோடு ஹாலிவுட் தரத்தில் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். தளபதி கச்சேரி பாடல் விஜய் ரசிகர்களுக்கான உற்சாக டானிக்காக அமைந்திருக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகங்கள். பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளின் பலத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ், முதல் பாதி படத்தை வேகமாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் கொடுத்தாலும், இரண்டாம் பாதியில் படத்தின் நீளத்தால் சோர்வைய செய்து விடுகிறார்.

தெலுங்குத் திரைப்படம் ‘பகவந்த்கேசரி’-யின் தழுவல் என்றாலும், முதல் பாதி வரை அப்படத்தை அப்படியே எடுத்திருக்கும் இயக்குநர் எச்.வினோத், இரண்டாம் பாதி கதையை முற்றிலுமாக மாற்றியமைத்து, விஜயின் அரசியல் பயணத்திற்கான படமாக கொடுத்திருக்கிறார்.

விஜய்க்கு பல அவதாரங்களை கொடுத்திருக்கும் இயக்குநர் எச்.வினோத், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்குமான படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு கிளைக்கதைகளை திரைக்கதையுடன் இணைத்தாலும், சில காட்சிகள் திணிக்கப்பட்டவையாக இருப்பது படத்தை பலவீனப்படுத்தி விடுகிறது.

விஜயின் அரசியல் பஞ்ச் வசனங்கள் மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் பேசும் அரசியல் வசனங்கள் கைதட்டல் பெறுவதோடு, விஜய் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கிறது. இறுதி சண்டைக்காட்சி மற்றும் விஜயின் மாஸ் காட்சிகள் ரசிகர்களை கொண்டாட வைத்தாலும், சில சண்டைக்காட்சிகளின் பின்னணியில் வடிவமைக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் தரமற்றதாக இருக்கிறது.

விஜய் ரசிகர்களுக்கான படமாக மட்டும் இன்றி சினிமா ரசிகர்களுக்கான படமாக முதல் பாதி அனைத்து தரப்பினரையும் முழுமையாக திருப்திப்படுத்தினாலும், இரண்டாம் பாதி அதை செய்ய தவறியிருப்பதோடு, கதை வெவ்வேறு பாதையில் பயணித்து திரைக்கதையை தொய்வடைய வைத்து விடுகிறது. இருப்பினும், விஜயின் கடைசி படத்தை அவர்களது ரசிகர்களுக்கான கொண்டாட்ட விருந்தாக கொடுத்ததில் இயக்குநர் எச்.வினோத், எந்த குறையும் வைக்கவில்லை.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.