வரவர புதிதாக தமிழ்சினிமாவுக்குள் நுழையும் அறிமுக இயக்குனர்கள் தங்கள் படத்திற்கான கதையை யோசிப்பதைவிட படத்திற்கு டைட்டில் வைப்பதையும் அதன் மூலம் எப்படி பப்ளிசிட்டி தேடலாம் என்பதையும்தான் யோசிக்கிறார்கள். இப்போது அறிமுக இயக்குனர் ராஜா சுப்பையா என்பவர் தனது படத்திற்கு ‘சரவணன் என்கிற சூர்யா’ என்று டைட்டில் வைத்து படத்தை இயக்கியும் முடித்துவிட்டார்.
இதில் பிரச்சனை என்னவென்றால் நடிகர் சூர்யாவின் ஒரிஜினல் பெயர் தான் சரவணன். எனவே படத்தின் டைட்டில் நேரடியாகவே சூர்யாவைத்தான் குறிக்கிறது. அதனால் படத்தின் டைட்டிலை மாற்றும்படி சூர்யா தரப்பில் இருந்து இயக்குனர் ராஜா சுப்பையாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் ராஜா சுப்பையாவோ இந்த டைட்டில்தான் படத்திற்கு பொருத்தமாக(தமிழ்சினிமாவின் நிலையை பார்த்தீர்களா?) இருப்பதாக கூறி டைட்டிலை மாற்ற மறுத்துவிட்டார். மேலும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்தப்படத்தின் டைட்டிலை சுற்றியே (என்ன கொடுமை சரவணன்?) அமைந்திருப்பதால் அப்படியேதான் படப்பிடிப்பும் நடத்தியிருக்கிறோம் என்றும் அப்படி டைட்டைலை மாற்றினால் பாதிப்படத்திற்கு மீண்டும் காட்சிகளை மாற்றி திரும்பவும் எடுக்கவேண்டும் என்றும் இதற்கு விளக்கம் கூறியிருக்கிறார்.
ஆனால் வெறும் வியாபார நோக்கத்திற்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் மட்டுமே இந்த டைட்டிலை வைத்திருக்கிறார்கள் என்பதை சாதராண சினிமா ரசிகன் கூட சொல்லிவிடுவான். இருந்தாலும் இதை அவ்வளவு எளிதாக விட்டுவிட விரும்பாத சூர்யா தரப்பினர் நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் கவுன்சிலிலும் புகார் அளித்திருப்பதாக செய்தி. தமிழில் டைட்டில் வைக்கச்சொன்னார்கள் என்பதற்காக இப்படியெல்லாமா?