யான் – விமர்சனம்

96

 

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ரவி கே.சந்திரன் இயக்கியுள்ள முதல் படம் இது. எமன் பிடியில் சிக்கிய காதலனை மீட்டு வர புறப்பட்ட நவீன சாவித்திரியின் கதையை லேட்டஸ்ட் ட்ரெண்டில் கமர்ஷியல் பேக்கேஜாக கொடுத்திருக்கிறார்..

மும்பையில் ஜாலியாக சுற்றும் ஜீவா, ரிட்டையர்டு ராணுவ வீரரின் மகளான துளசியை காதலிக்கிறார். ஆனால் ஜீவா வேலையில்லாமல் இருப்பதை நாசர் குத்திக்காட்ட, ட்ராவல் ஏஜென்ட் போஸ் வெங்கட் மூலமாக உடனே பஸிலிஸ் தான் என்கிற நாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்து கிளம்புகிறார்.

அந்த நாட்டு ஏர்போர்ட்டில் இறங்கியதும் அவர் லக்கேஜில் போதை மருந்து இருப்பதாக கூறி அவரை அந்நாட்டு போலீசார் கைது செய்கின்றனர். போதை மருந்து கடத்தலுக்கு மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட துளசி, தனியாளாக ஜீவாவை மீட்க கிளம்புகிறார். ஆனால் நடந்தது என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ்..

முதல் பாதி காதல், இரண்டாம் பாதி ஆக்ஷன் என பிரித்திருக்கிறார்கள். காதல் காட்சிகளில் பல இடங்களில் ஜீவா மறைந்து,  ‘மிஸ்டர் சந்திரமௌலி’ கார்த்திக் தான் ஞாபகத்துக்கு வந்து போகிறார். வெளிநாட்டு சிறையில் சிக்கியபின்னர் தான் ஜீவாவின் நடிப்பில் சூடு ஏறுகிறது. நம்பமுடியாத சாகச காட்சிகள் தான் என்றாலும் ஜீவாவின் உழைப்பு நம்பும்படியாகத்தான் இருக்கிறது.

காதல் காட்சிகளாகட்டும், காதலனை மீட்க போராடும் காட்சிகளாகட்டும் துளசியிடம் வசீகரமும் ஈர்ப்பும் சாற்று குறைவாகவே இருக்கிறது. ஜீவாவுக்கு ஒரு காதலி என்கிற அளவிலேயே பயன்பட்டிருக்கிறார். வரும் படங்களில் தன்னை நிரூபிக்க முயற்சி எடுத்தல் நலம்.

வெளிநாட்டில் ஜீவா, துளசிக்கு உதவி செய்யும் கால் டாக்சி ட்ரைவர் கருணாகரன் காமெடியை தாண்டி குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார். ஜெயிலில் அடைபட்டு கிடக்கும் தம்பிராமையாவும் அதேரூட்டில் தான் பயணிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ‘நீ வந்து போனது நேற்று மாலை’ பாடல் இனிமை.. சேசிங் காட்சிகளில் பின்னணி இசை திகில் கூட்டுகிறது. ஒளிப்பதிவாளராக மனுஷ் நந்தனை இயக்குனர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக தெரிகிறது. குறிப்பாக பசிலிஸ்தான் ட்ரிப் போய்வந்த உணர்வு நமக்கு ஏற்படுவது உண்மை.

வெள்ளிக்கிழமை ட்ராபிக்கில் மாட்டிய ஆம்னி பஸ் போல, இடைவேளை வரை ரொம்பவே மெதுவாக நகரும் கதை, ஜீவா வெளிநாட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதும் தான் பைபாஸ் ரோட்டை பார்த்தது போல வேகமே எடுக்கிறது. ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சாத்தியமே இல்லாத காட்சிகள் தான்.. ஆனால் அவை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டுவதென்னவோ உண்மை.

மும்பையில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவனை வெளிநாட்டில் பார்த்ததும், தான் தப்பிக்கவேண்டிய இக்கட்டான சூழலில் அவனை மாட்டிவிட நினைத்து ஜீவா ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் கிளைக்கதையை தவிர்த்திருந்தால் இன்னும் சுவராஸ்யம் கூடியிருக்கும்.

Comments are closed.