சாக்லேட் பையன்களாக தமிழ்சினிமாவில் நுழையும் இளம் ஹீரோக்களில் பலர் ஒரு காலகட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுகின்றனர். இல்லையா, சினிமா அவர்களுக்கு குட்பை சொல்லி விடுகிறது. இருந்தாலும் சிலர் அவ்வப்போது எதிர்நீச்சல் போட்டு நாங்களும் இருக்கிறோம் என தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதும் உண்டு.
அந்தவகையில் அறிமுகமான முதல் படத்திலேயே எக்கச்சக்கமான இளம் ரசிகைகளை பெற்ற அப்பாஸும் ஒருகட்டத்தில் தமிழ்சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஆனால் அவ்வப்போது சின்னத்திரை விளம்பரங்களின் மூலம் தன்னுடைய இருப்பை நமக்கு ஞாபகப்படுத்தி வந்தார்.
இப்போது அப்பாஸுக்கு நேரம் கைகூடி வந்திருக்கிறது. தற்போது பாரதி, பெரியார் ஆகிய படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் இயக்கிவரும் ‘ராமனுஜன்’ படத்தில் நடித்து வருகிறார் அப்பாஸ். கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் இந்தப்படம் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தயாராகிறது.
இதுதவிர மலையாளத்தில் பிரசாந்த் என்பவர் இயக்கும் ‘லவ்ஸ்டோரி’ என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார் அப்பாஸ். ஏற்கனவே 1999ல் ‘கண்ணெழுதி பொட்டும் தொட்டு’ என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நுழைந்த அப்பாஸ், அதன்பின்னரும் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.