தமிழ்சினிமாவின் மும்மூர்த்திகளில் ரஜினி, கமல் இருவரின் வாரிசுகளும் டைரக்ஷன், நடிப்பு என சினிமாவில் கால்பதித்து விட்டார்கள். கேப்டன் விஜயகாந்த் மட்டும் தன் இளையமகன் சண்முகப்பாண்டியனை ஹீரோவாக களம் இறக்க சரியான கதையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது கதையுடன் நேரமும் கூடிவர, ‘சகாப்தம்’ என்ற படத்தில் ஹீரோவாகிவிட்டார் சண்முகப்பாண்டியன்.
இந்தப்படத்தை டி.ஈ.சந்தோஷ் குமார் ராஜன் என்பவர் இயக்குகிறார். கதையை கே.பி.பி.நவீன் என்பவர் எழுத ஒளிப்பதிவு செய்கிறார் பூபதி. இந்தப்படத்திற்கான துவக்க விழா வரும் டிச-12(வியாழன்) அன்று சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் இல்லத்தில் நடைபெற இருக்கிறது.
இப்போது மேலெ குறிப்பிட்ட விஷயத்திற்கு வருவோம். விஜயராஜ் என்ற தனது சொந்தப்பெயரில் தமிழ்சினிமாவில் கேப்டன் அடியெடுத்து வைத்தபோது, அப்போது சூப்பர்ஸ்டாராக இருந்த ரஜினிகாந்த் போல வரவேண்டும் என்பதற்காக விஜயகாந்த் என அவரது பெயரை மாற்றினார்கள். அதுபோலவே அவரும் ரஜினிக்கு இணையான ஒரு இடத்தையும் பிடித்தது வரலாறு.
அந்தவகையில் டிசம்பர் 12, ரஜினியின் பிறந்தநாள் என்பதால் அன்று விஜயகாந்த்தின் மகன் ஹீரோவாக அறிமுகமாவது செண்டிமெண்டாக நன்றாக இருக்கிறது என திரையுலகில் பலரும் கருதுகிறார்கள். ஆனால் உண்மை நிலவரமாக விஜயகாந்த்திற்கு வியாழக்கிழமை ராசியான நாள் என்பதால்தான் டிசம்பர்-12ஐ தேர்ந்தெடுத்தார்களாம். சரி.. இது ஒரு எதேச்சையான நிகழ்வுதான். ஆனாலும் அதை நல்ல சகுனமாகவும் கூட நாம் எடுத்துக்கொள்ளலாம்.