தமிழ்சினிமாவில் பல வருடங்களாக நடித்து வந்தாலும் இன்னும் நிலையான ஒரு இடத்தை தக்கவைக்கமுடியாமல் போராடி வருபவர் விக்னேஷ். ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு அவர் நடிக்கும் படத்திற்கு ‘பூனை” (புலியாக மாறிய கதை) என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படம் தான் தனக்கு கலையுலகில் நல்ல நடிகனாக, நட்சத்திர அந்தஸ்தை பெற்று தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் விக்னேஷ்.
கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரகலா இருவரும் நடிக்கிறார்கள். இந்தப்படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா. பாடல்களை சினேகன் எழுதுகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்கிரிஷ் மிர்னாலி.
தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவன் குற்றவாளியாக தண்டனை பெறுகிறான். ஜெயிலிருந்து தப்பி வருகிற அவன் சந்திக்கிற சம்பவங்களை திகிலூட்டும் விதமாக உருவாக்கி இருக்கிறார்களாம். பெரும்பகுதி படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்தி முடித்துவிட்டார்கள். தற்போது சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.