தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை இயக்குவதன்மூலம் ஒரு இயக்குனராகவும் அடியெடுத்து வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். இவர் தமிழ், மலையாளம், இந்தி என மூன்று மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படங்களில் தனுஷ் நடித்தபோது அந்த படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜுக்கும் தனுஷுக்கும் இடையே ஏற்பட்ட நட்புதான் இப்போது வேல்ராஜை இயக்குனராக மாற்றியிருக்கிறது. தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்திலும் இவர்தான் ஒளிப்பதிவாளர்.
இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். ‘3’ படத்திற்குப்பிறகு தனுஷ், அனிருத் இருவரும் இணைவதால் மீண்டும் ‘கொலவெறி’ மாதிரி ஒரு பரபரப்பை கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃப்லிம்ஸ்தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது. இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் முதல் டீஸரும் இசை வெளியீடும் நடக்க இருக்கின்றன.