தனி ஒருவன் – விமர்சனம்

242

“உன் எதிரி யார் என்பதை சொல்.. உன் பலம் என்னவென்று சொல்கிறேன்” – இந்த டேக்லைனை வைத்து இரண்டரை மணி நேரம் விறுவிறு சதுரங்க ஆட்டம் ஆடியிருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.

ஐ.பி.எஸ் ட்ரெய்னிங்கில் இருக்கும்போதே நகரத்தில் ஆங்காங்கே குற்றம் பண்ணும் ஆட்களை தனது நண்பர்கள் துணையுடன் போலீஸில் சிக்கவைக்கிறார் ஜெயம் ரவி. போலீஸ் ஆபிசராக மாறுவதற்கு முன்பே நாட்டில் நடைபெறும் பல மோசடி சம்பவங்களுக்கு பின்னணியில் நிழலாக இருந்து ஆட்டுவிக்கும் விஞ்ஞானி அரவிந்த்சாமி தான் தனது எதிரி என பிக்ஸ் பண்ணுகிறார் ஜெயம் ரவி..

போலீஸ் அதிகாரி ஆனவுடன்வெளிநாடு மூலமாக மருந்துகளை விற்பதில் பெரிய அளவில் மோசடியில் இறங்கும் அரவிந்த்சாமியை நோக்கை காய்களை நகர்த்தி, அவரது திட்டம் பலிக்கவிடாமல் செய்ய முயற்சி எடுக்கிறார் ஜெயம் ரவி. விஷயம் அரவிந்தசாமிக்கு தெரியவர ஜெயம் ரவியின் நடவடிக்கைகளில் இருந்து சாதுர்யமாக தப்பிக்கிறார்.

தவிர ஜெயம் ரவிக்கு தெரியாமல் அவர் உடலிலேயே மின் சாதனம் ஒன்றை பொருத்தி, அவரது செயல்கள் ஒவ்வொன்றையும் முன்கூட்டியே அறிந்து, அவரது நண்பர் வரை போட்டுத்தள்ளுகிறார். தனது திட்டங்கள் எல்லாம் அரவிந்தசாமிக்கு எப்படி தெரிகிறது என குழம்பும் ஜெயம் ரவி, ஒருகட்டத்தில் அதற்கான விடையையும் கண்டுபிடிக்கிறார்..

இப்போது அரவிந்த்சாமியின் போக்கிலேயே போய் அவரை மடக்க புதிய முறையில் வியூகங்களை வகுத்து, எப்படி அவரை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

அப்ளாஸ் அள்ளுகிற இந்த மாதிரி கேரக்டர்களை தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு, ஏன் அப்பாடக்கர் மாதிரி கேரக்டர்களை செலக்ட் செய்கிறார் என்கிற கோபம் தான் ஜெயம் ரவி மீது வருகிறது. அந்த அளவுக்கு இந்தப்படத்தில் ஜெயம் ரவி டோட்டல் சேஞ்ச்.. மிடுக்கு, கோபம், கலந்த கேரக்டராக மாறி, நடிப்பில் சூப்பர் பெர்பாமன்ஸ் காட்டுகிறார்… இடைவேளைக்குப்பின் தனது எதிரியுடன் ஜெயம் ரவி ஆடும் ‘தில்லாலங்கடி’ ஆட்டம் அவரை தனி ஒருவனாய் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறது.

ஹீரோ எவ்வளவுக்கு எவ்வளவு சூப்பர்மேனாக இருக்கிறானோ அந்த அளவுக்கு வில்லன் கேரக்டர் வலுவாக இருந்தால் தான் படம் நிற்கும்.. தனது புதிய பரிமாண வில்லத்தனத்தால், தினி ஒருவனாக படத்தை நிற்க வைத்துள்ளார் அரவிந்த்சாமி.. அவரது டோன்ட் கேர் ரியாக்ஷன்கள், மந்திரியான தனது தந்தை தம்பி ராமையாவை டீல் பண்ணும் விதம், ஜெயம்ரவியை அலைக்கழிக்க வைக்கும் விளையாட்டு கலந்த வில்லத்தனம் எல்லாமே டபுள் ஒகே..

நாயகனை துரத்தி லவ் பண்ணுகிற எவர்கிரீன் டிபிக்கல் தமிழ்சினிமா கேரக்டர் தான் என்றாலும், அதில் நயன்தாரா நடிக்கும்போது தனி மெருகு வந்துவிடுகிறது. ஜெயம் ரவி நயன்தாராவிடம் காதலைச்சொல்லும் சிச்சுவேஷன் கைதட்டலை அள்ளுகிறது.

இலையில் அளவாக வைத்த ஸ்வீட் போல மந்திரியாக வரும் தம்பி ராமையாவின் மைன்ட் வாய்ஸ் காமெடியும், அறியாமையால் செய்யும் கோணங்கித்தனங்களும் சீரியஸ் மோடில் செல்லும் படத்தை அவ்வப்போது சிரிப்பு மோடுக்கு ட்யூன் பண்ணுகின்றன. முதலமைச்சராக வரும் நாசர் அரவிந்த்சாமியின் வில்லத்தனத்தின் முன் பெட்டிப்பாம்பாக மாறுவது சரியான காமெடி.

இரண்டாம் நிலை வில்லனாக வம்சியின் அடியாள் கதாபாத்திரம் அவருக்கு செமையாக செட் ஆகியிருக்கிறது. ஜெயம் ரவியின் நண்பர்கள் டீமாக வரும் கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன் உட்பட நால்வரும் பொருத்தமான தேர்வு. பாடல்களில் கவனம் ஈர்க்காத ஹிப் ஹாப் தமிழா, பின்னணி இசையில் படத்திற்கு வேகம் கூட்டியுள்ளார். கூடவே ராம்ஜியின் கேமராவும் தன பங்கிற்கு உண்மையாக ஒத்துழைத்துள்ளது.

எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறைந்துவிடக்கூடாது என்பதால் திரைக்கதையில் இயக்குனர் மோகன்ராஜா கண்கொத்தி பாம்பாக கவனம் செலுத்தியிருப்பது நன்றாகவே தெரிகிறது. ஜெயம் ரவி தனது உடம்புக்குள் மின் சாதனம் பொருத்தப்பட்டுள்ளதை கண்டுபிடிக்கும் இடமும் அதன்பின் அரவிந்தசாமிக்கு எதிராக ஆட்டும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு காட்டியிருக்கிறார் மோகன்ராஜா.

இந்தப்படம் வழக்கம்போல மோகன்ராஜா பாணியிலான ரீமேக் படமல்ல.. அவரது ஒரிஜினல் படம்.. அதற்கு தகுந்த சன்மானத்தை அவருக்கு ‘வெற்றி’யாக தந்திருக்கிறான் தனி ஒருவன்.

Comments are closed.