சத்ரியன் – விமர்சனம்

285

sathriyan review

ரவுடியிசமும் அதற்குள் காதலும் நுழைந்துகொண்ட ஒரு இளைஞனின் ரத்தமும் காதலுமான வாழ்க்கை தான் இந்த சத்ரியன்.

திருச்சியிலேயே மிகப்பெரிய ரவுடியான சமுத்திரத்தை (சரத் லோகித்ஸ்வா) அமைச்சர் சொன்னதற்காக போட்டுத்தள்ளுகிறார் அருள்தாஸ். சமுத்திரத்தின் வலதுகையாக விஜயமுருகன் அவரது தீவிர விசுவாசியாக விக்ரம் பிரபு. சமுத்திரம் இறப்புக்குப்பின், கல்லூரி சென்றுவரும் அவரது மகள் மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக விக்ரம்பிரபுவை அனுப்பி வைக்கிறார் விஜயமுருகன்..

எப்போதும் நிழல்போல தொடரும் விக்ரம்பிரபு மீது காதலாகிறார் மஞ்சிமா.. ஆனால் திருச்சியில் மிகப்பெரிய ரவுடி ஆகவேண்டும் எனும் லட்சியத்தில் இருக்கும் விக்ரம் பிரபுவோ மஞ்சிமாவிடம் பாராமுகம் காட்டுகிறார்.. அடிமேல் அடி அடிக்க அம்மியும் நகரும் என்பதுபோல, ஒருகட்டத்தில் மஞ்சிமாவின் காதலை ஏற்கிறார் விக்ரம் பிரபு…

ஆனால் விஜயமுருகன் இந்த காதலை விரும்பவில்லை. மஞ்சிமாவின் அண்ணன் சௌந்தர்ராஜாவும் அம்மா தாராவும் இந்த காதலை தீவிரமாக எதிர்க்கிறார்கள். அதனால் விக்ரம் பிரபுவை மஞ்சிமாவை விட்டு ஒதுங்க சொல்கிறார். இதற்கிடையே விக்ரம் பிரபுவை போட்டுத்தள்ள முயற்சிக்கிறார் அருள்தாஸ். ஆனால் அவரையே கட்டம் கட்டி மேலே அனுப்பும் விக்ரம் பிரபு மஞ்சிமாவை அழைத்துக்கொண்டு தலைமறைவாகிறார்..

இதனால் கோபமாகும் விஜயமுருகன் விக்ரம் பிரபுவை போட்டுத்தள்ள தயாராகிறார். இதில் தவறுதலாக விக்ரம் பிரபுவின் நண்பன் சிக்க, இதற்கு முடிவுகட்ட விஜயமுருகனை தேடிவந்து நேருக்கு நேர் சந்திக்கிறார் விக்ரம் பிரபு.. முடிவு என்ன ஆனது..?

மிகப்பெரிய அளவில் வன்முறை இல்லாவிட்டாலும் கூட ரவுடியிச படம் என்பதால் ஒருவித இறுக்கத்துடனேயே முழுப்படமும் நகர்கிறது. அதன் தாக்கம் விக்ரம் பிரபுவின் மீது நன்றாகவே விழுந்தும் இருக்கிறது.. அவரது வேலையே இடைவேளைக்குப்பின் தான் ஆரம்பிகிறது என்றே சொல்லலாம். மஞ்சிமா மோகன் வரும் காட்சிகளில் எல்லாம் கொள்ளை அழகு. தனது தந்தை ஒரு ரவுடி என்பதையே ஜீரணிக்க முடியாத அவர் ரவுடி என்று தெரிந்தே விக்ரம் பிரபு மீது காதல் கொள்வது சற்று அந்நியமாக இருக்கிறது.. இருந்தாலும் காதலுக்குத்தான் கண்ணில்லையே என சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்..

இன்னொரு ஜோடியாக வேட்டையன்-ஐஸ்வர்யா தத்தா படத்திற்கு சம்பந்தமில்லாமல் இவர்களது காட்சிகள் இருந்தாலும், பின்னால் விக்ரம் பிரபு உயிரை காப்பாற்றி அவரது நண்பராக் மாறி கதையின் திருமணத்திற்கும் காரணமாகிறார் வேட்டையன். ரவுடிகளாக சரத் லோகித்ஸ்வா, விஜயமுருகன், அருள்தாஸ் என ஆளாளுக்கு போட்டி போட்டு வீரத்தை வெளிப்படுத்துகிறார்கள்.. சரத் லோகித்ஸ்வாவுக்கு இன்னும் கொஞ்சம் அதிகம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன், அமைச்சர் நந்தகுமார் ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

ஊரையே மிரட்டும் ரவுடி, அவனை காதலிக்கும் கல்லூரி மாணவி, காதலுக்காக திருந்திவாழ முயற்சிக்கும்போது அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் மொத்தப்படமும்.. பல படங்களில் பார்த்து சலித்த கதைதான் என்பதால் பல காட்சிகளில் நம் மனது ஒன்ற மறுக்கிறது.. இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் திரைக்கதை மூலம் காட்சிகளை வித்தியாசப்படுத்த வாய்ப்பிருந்தும் அதை கையாளாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். ஆனால் க்ளைமாக்ஸ் காட்சியில் நல்ல ஒரு முடிவை சொல்லி சுபம் போட்டு நம்மை ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார் அதற்காக அவரை பாராட்டவேண்டும்.

Comments are closed.