ரங்கூன் – விமர்சனம்

228

Rangoon review

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கு படம் இது.

சிறுவயதிலே பர்மாவில் இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வாழவந்த குடும்பம் கௌதம் கார்த்திக்குடையது. அப்பா இல்லாத நிலையில் அம்மாவையும் தங்கையையும் காப்பாற்ற சௌகார்பேட்டையில் அனைவரும் மதிக்கும் நகை வியாபாரியான சித்திக்கிடம் (சியா) வேலைக்கு சேரும் கௌதம் அவரை ஒருமுறை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார்

அதன்பின்னால் சித்திக்கின் நன்மதிப்பை பெற்று வியாபாரத்தை கற்றுக்கொண்டு அவரது நம்பிக்கையான ஆளாக மாறுகிறார்.. மிகப்பெரிய மரியாதைக்குரிய நபராக இருந்தாலும் தான் பொருளாளராக இருக்கும் சங்கத்திற்கு இரண்டு கோடி கடனை திருப்பி கட்டவேண்டிய நெருக்கடியில் இருக்கும் சித்திக் கௌதம் கார்த்திக் உதவியுடன் கடனை எல்லாம் அடைக்கிறார்.

இந்நிலையில் சங்கத்தின் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்றால் சங்கத்திற்கு மிகப்பெரிய தொகையை அன்பளிப்பாக தரவேண்டும் என்பதற்காக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை வரவழைத்து அவற்றை கௌதம் கார்த்திக் மூலமாக ரங்கூனுக்கு அனுப்பி பணமாக மாற்றிவர அனுப்பிவைக்கிறார் சித்திக்.

நண்பர்களுடன் பல சோதனைகளை கடந்து ரங்கூனில் தங்கத்தை கொடுத்து ஆறு கோடி ரூபாய் பணமாக மாற்றும் கௌதம் கார்த்திக்கிடமிருந்து அந்தப்பணத்தை யாரோ திருடிவிடுகின்றனர். பணமில்லாமல் ஊர் திரும்பும் அவர்களுக்கு இரண்டு நாட்களில் அந்தப்பணத்தை எப்படியாவது கொண்டுவந்து கொடுக்கும்படி நிபந்தனை விதிக்கிறார் சித்திக். தொலைந்த பணத்தை கண்டுபிடிக்க துப்பு எதுவும் கிடைக்காத நிலையில் இரண்டே நாளில் அவ்வளவு பெரிய தொகையை சம்பாதிக்க, வேறு வழியின்றி குறுக்கு வழியில் இறங்குகின்றனர் கௌதம் அன் கோவினர்.

ஆனால் அது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குகிறது.. அந்த ஆறு கோடி ரூபாய் பணம் எப்படி களவு போனது..? அந்தப்பணத்தை சம்பாதிக்க கௌதம் கார்த்திக் இறங்கிய குறுக்கு வழி என்ன..? அதுவும் சிக்கலான நிலையில் குறித்த நேரத்திற்குள் சித்திக்கிடம் அந்தப்பணத்தை சேர்ப்பித்தாரா கௌதம் கார்த்திக்..? என்பது போன்ற பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் விறுவிறுப்பாக விடை சொல்லியிருக்கிறார்கள்.

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியை இயக்கியவர் என்பதால் படத்தையும் காமெடிப்படமாகத்தான் இயக்கியிருப்பார் என நினைத்தால் ‘கோல்டு ராக்கெட்’ பின்னணியில் ஒரு விறுவிறுப்பான படத்தை கொடுத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

கௌதம் கார்த்திக்கின் முந்திய படங்களுடன் ஒப்பிடுகையில் இது அவரை வேறு ஒரு ஆளாக மாற்றியிருக்கிறது.. வடசென்னை பையனாக தன்னை மாற்றிக்கொண்டுள்ள அவரது நேர்மையான உழைப்பும் காதல், சென்டிமென்ட், ஆக்சன் காட்சிகளில் நேர்த்தியான நடிப்பும் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. கீப் இட் அப் கௌதம்..

கௌதமின் காதலியாக புதுமுகம் சனா.. மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும் அந்த கேரக்டரில் அவரது நடிப்பில், கௌதமுடனான காதல் காட்சிகளில் குறும்பு கொப்பளிக்கிறது. கௌதமின் தங்கையாக வருபவரும் வசீகரிக்கிறார்.

படத்தின் மிக முக்கிய பாத்திராமான சியா என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார் மலையாள குணச்சித்திர நடிகர் சித்திக்.. அவரது அனுபவமும் பண்பட்ட நடிப்பும் படத்தை தாங்கி பிடிக்கின்றது. கௌதமின் நண்பர்களாக வரும் லல்லு குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார்.. படம் முழுதும் காமெடிக்கு பொறுப்பேற்று இருக்கும் சுமார் மூஞ்சி’ டேனியல் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்கு வித்திட்டு ‘அட’ என ஆச்சர்யப்படுத்துகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஆனந்த் அந்த கேரக்டராக மாறியிருக்கிறார்.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்துக்கு உயிர் கொடுக்கிறது. தங்க மார்க்கெட்டின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டு இருப்பதால் காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் கூடவே செய்கிறது.. அதை தேவையற்ற காட்சிகளால் வீணடிக்காமல், இழுத்தடிக்காமல் நியாயமாக படமாக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.. பணத்தை களவுகொடுத்த பிறகு அதை உடனே வேறுவழியில் பெறுவதற்காக கௌதம் அன் கோ குறுக்கு வழியில் இறங்குவது கதையை விட்டு விலகுவதுபோல தோன்றினாலும், அது சூழ்நிலையால் எடுக்கப்பட்ட முடிவு என்பதை சரியாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ராஜ்குமார்.

ரங்கூன் என டைட்டிலை வைத்துவிட்டு அது கதையின் திருப்பத்திற்கு உதவும் கால்மணி நேர காட்சிகளாகவே கடந்துபோவது ஏமாற்றம் தருகிறது.. இன்னும் அதிகமாக ரங்கூனை பயன்படுத்தி இருக்கலாம்.. அதேபோல ரங்கூனுக்கு தங்கத்தை கடத்தும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் திக் திக்கை கூட்டியிருக்கலாம். மற்றபடி பொழுதுபோக்கில் சுணக்கம் ஏற்படாத ஒரு ஜாலியான படம் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

Comments are closed.