நய்யாண்டி படத்தில் இயக்குனர் சற்குணம் தன்னை ஒரு பாடல் காட்சியில் போட்டோ மார்ஃபிங் செய்து ஏமாற்றிவிட்டார் என நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ள நஸ்ரியா, இன்று முற்பகல் கமிஷனர் அலுவலகத்துக்கே புகார் கொடுக்க வந்து விட்டார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்திருக்கிறார் நஸ்ரியா. படமும் வரும் 11ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் சற்குணம் மீது நஸ்ரியா புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி சற்குணம் என்ன சொல்லுகிறார்?
“வளர்ந்துவரும் நேரத்தில் நஸ்ரியா இப்படி ஒரு புகார் அளித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. நான் ‘களவாணி’, ‘வாகை சூட வா’ என இரண்டு படங்களை எடுத்திருக்கிறேன். இரண்டு படங்களும் எப்படிப்பட்டவை என்று ரசிகர்களுக்கே தெரியும். வாகை சூடவா படத்திற்கு தேசிய விருதும் வாங்கியிருக்கிறேன். அப்படி இருக்கும்போது என் மீது இப்படி ஒரு பிரச்சனையை கிளப்பியிருப்ப்பது எதனால் என்று தெரியவில்லை.
நஸ்ரியா யாருடைய தூண்டுதலின் பெயரிலோ தான் தனது பப்ளிசிட்டிக்காக, அதன்மூலம், வரும் படங்களில் தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக இறங்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. இந்தப்படத்திற்கு சென்சார் போர்டு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. அப்படி ஆபாசமான படம் என்றால் அவர்களே ஆட்சேபித்திருப்பார்களே.
சரி, அப்படியே இருந்தாலும் அவர் சொல்லும் காட்சி இருந்தால் அதை நீக்கிவிட்டு படத்தை திரையிடுகிறேன் என்றும் சொல்கிறேன். அப்படி சொல்லியும்கூட அவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது வருந்தத்தக்க விஷயம். நான் என் தரப்பிலிருந்து உண்மையை நிரூபிக்க ஆதாரங்களோடு தயாராக இருக்கிறேன். நஸ்ரியா தயாரா?” என்கிறார் சற்குணம். இதற்கு நஸ்ரியாதான் பதில் சொல்லவேண்டும்.