நகமும் சதையுமாக என நட்புக்கு உவமை சொல்வார்கள். ஆனால் ரத்தமும் சதையுமாக என்றால் அதற்கு ராம்கோபால் வர்மா தான் உவமை, உதாரணம் எல்லாம். அந்த அளவுக்கு தாதாயிச படங்களாக எடுத்து தள்ளியவர். 1989ல் தெலுங்கில் வெளியான ‘சிவா’ படத்தில் ஆரம்பித்து கம்பெனி, சர்க்கார், சத்யா, ரத்த சரித்திரம் என அவரது 90 சதவீத படங்களில் ரவுடியிசம் தான் பிரதானம். இந்த நீண்ட ‘அண்டர்வேர்ல்டு’ பயணத்தை தற்போது முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.
இனிமேல் தாதாயிச படங்களை இயக்குவதில்லை என தில்லாக அறிவித்திருக்கிறார் வர்மா. அடுத்து அவரது பார்வை காதல் பக்கம் திரும்பியிருக்கிறதாம். இத்தனைக்கும் ஆரம்பத்தில் இந்தியில் அமீர்கான், ஊர்மிளாவை வைத்து ரங்கீலா என்ற லவ் ரொமாண்டிக் படத்தை இயக்கியவர்தான். அதன்பின் ஆக்ஷன் லைன் செட்டாகிவிட அதிலேயே ரொம்ப தூரம் உள்ளே போய்விட்டார்.
இப்போது கடைசியாக தான் இயக்கியிருக்கும் சத்யா-2தான் தனது கடைசி அண்டர்வேர்ல்டு படம் என முடிவு செய்துள்ள வர்மா தற்போது கைவசம் இரண்டு கதைகளை வைத்துள்ளார். அதில் ஒன்று மார்ஷியல் ஆர்ட்ஸ் சம்பந்தப்பட்ட கதை. அதைத்தான் முதலில் இயக்க முடிவு செய்துள்ளாராம் வர்மா. இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார் ராம்கோபால் வர்மா.