பெட்ரோல் கண்டுபிடிப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சுற்றுலா செல்லும்போது பேருந்து விபத்தில் பலியாகின்றனர். ஆனால் அதில் இருந்து, அதிர்ஷ்டவசமாக தப்பிய ஒரு பெண் மூலமாக அதுவிபத்தல்ல, திட்டமிட்ட கொலை என்கிற விபரம் டில்லியில் அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கும் பிரசாந்த்துக்கு தெரிய வருகிறது.
பேருந்து விபத்தை புலன் விசாரணை செய்யும் பிரசாந்துக்கு அதன் பின்னால் மறைந்துள்ள பெட்ரோல் அரசியல் மர்மங்கள் தெரிய வருகின்றன.. பிரசாந்தின் முயற்சியில் இந்த உண்மையை வெளிக்கொண்டுவர, விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது.
ஆனால் அதற்கு காரணமான பிரசாந்த்தின் குடும்பத்தையே அழிக்கிறார் பிரபல தொழிலதிபர் ஆர்.கே. கடைசியில் ஆர்.கேவை பொறிவைத்து பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் பிரசாந்த்.. நீதி எந்த விதத்தில் கிடைக்கிறது என்பது க்ளைமாக்ஸ்..
பெட்ரோல் விலை அடிக்கடி ஏறுவதன் பின்னணியில் உள்ள அரசியலை இந்தப்படத்தில் பிரசாந்த்தை வைத்து புலன் விசாரணை செய்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி.. படம் எடுக்கப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்டது என்பது இன்றைக்கு மாறிவிட்ட டெக்னாலஜி மூலமாக பல காட்சிகளில் நன்கு தெரிகிறது. இருந்தாலும் எவர்கிரீன் பிரச்சனையான பெட்ரோல் விலை உயர்வு என்பதால் இன்றைய சூழலுக்கும் கதை பொருந்துகிறது..
அசிஸ்டென்ட் கமிஷனராக பிரசாந்த் நன்றாகத்தான் நடித்திருக்கிறார். நல்ல உழைப்பு.. படம் உரிய காலத்தில் வந்திருந்தால் நிச்சயம் அவருக்கு பிரேக் கொடுத்திருக்கும்.. வில்லனாக அறிமுகமாகியுள்ள ஆர்.கேவின் கொக்கரிப்பு பலே… பிரமிட் நடராஜனின் சலம்பல், ராதாரவி, பிரகாஷ்ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோரின் கோர்ட் வாதங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. ஒருகாலத்தில் அனல் பறந்த லியாகத் அலிகானின் வசனங்கள், இந்தப்படத்தில் பிளாஸ்க்கில் வைத்த காபி போல சூடு கம்மியாகவே இருக்கிறது.
ஆர்.கே.செல்வமணியின் முந்தைய ஆக்சன் படங்களில் பாடல்களை குறைத்து படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருப்பார். இதில் அப்படியே உல்டா.. விறுவிறுப்புக்கு பாடல்கள் தடை போடுகின்றன.. எடிட்டிங்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.. விறுவிறுப்பாக செல்லும் முதல் பாதி, போரடிக்காத கதை என்கிற ஒரு விஷயத்திற்காக தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.
Comments are closed.