
கிராமத்து பால்காரரான சம்பத்ராம் தன் மனைவியை சந்தேகப்பட்டு அடித்து விரட்டுவதோடு, மகன் இர்பானையும் அவளிடமிருந்து பிரித்து தாய்ப்பாசம் இல்லாமல் கண்டிப்புடன் வளர்க்கிறார்.. வளர்ந்து வாலிபனாகும் இர்பானுக்கு முதல் காதல் பக்கத்து ஊரில் உள்ள அர்ச்சனா மீது வருகிறது. இர்பான் பால்காரன் என்பதால் அவரை ஒதுக்கிவிட்டு வேறு ஒருவருக்கு கழுத்தை நீட்டுகிறார் அர்ச்சனா..
அந்தநாளிலேயே அடுத்த காதல், இர்பானின் சிறுவயது தோழியான அருந்ததி நாயர் மீது வருகிறது. இர்பானின் சிறுபிள்ளைத்தனத்தாலும், அவரது தந்தையின் ஆங்காராத்தாலும் இந்த காதலுக்கும் வெட்டு விழ, அந்தசமயம் தன் தாய் நல்லவள் என்கிற உண்மையறிந்து, ஆறுதலுக்காக அவரை தேடிப்போகிறார் இர்பான்.. அவர் தேடிய தாயன்பும் காதலும் அவருக்கு கிடைத்ததா என்பது க்ளைமாக்ஸ்..
‘சி’ சென்டர் ஆடியன்ஸை குறிவைத்து ‘ரீச்’சாகும் விதமாக நடிக்க முயற்சித்திருக்கிறார் இர்பான். கதை தொண்ணூறுகளில் நடப்பதாக இருந்தாலும் இர்பானின் அமெச்சூர்த்தனமான காதல், இன்றைய இளைஞனினின் பிரதிபலிப்பாகவே அவரை காட்டுகிறது. கூடவே காமெடிக்கு நாடக ஆசிரியராக, வெட்டி ஆபிசராக சிங்கம் புலி. பல இடங்களில் சிரிக்க வைக்கவும் செய்கிறார். ஒவ்வொருமுறையும் அவரது நாடகம் பாதியிலேயே நிற்பது நல்ல காமெடி.
கதாநாயகிகள் அருந்ததி நாயர், அர்ச்சனா இருவருமே நல்ல தேர்வு.. இருவருக்குமே களையான முகம்.. குறிப்பாக முன்னாள் நடிகை அருணாவை ஞாபகப்படுத்துகிறார் அருந்ததி நாயர்.. நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்கிவிடுவதால் அடுத்தடுத்த படங்களில் இவர்கள் இருவரையும் பார்க்கமுடியும் என நம்பலாம். இர்பானின் தந்தையாக நடித்திருக்கும் சம்பத்ராமின் கேரக்டர் தான் வில்லங்கம் என்றாலும், நடிப்பில் சோடையில்லை. கண்ணனின் இசையில் அம்மா பற்றிய பாடல் கேட்கும்போது மனது கனக்கிறது.
தொண்ணூறுகளில் நடக்கும் கதை என்று ஆரம்பத்திலேயே காட்டிவிட்டாலும். இது தொண்ணூறுகளிலேயே வந்திருக்கவேண்டிய படமோ என்று நினைக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி. பொங்கி எழவேண்டிய மனோகரன், நம்மை க்ளைமாக்ஸில் பொங்கி அழ வைத்து விடுகிறான். என்ன காரணத்திற்காக அப்படி ஒரு க்ளைமாக்ஸ் வைத்தார் என்பது இயக்குனருக்கு மட்டுமே வெளிச்சம்..
Comments are closed.