’காட்டாளன்’ விமர்சனம்

7

நடிகர்கள் : ஆண்டனி வர்கீஸ், சுனில், கபீர் துகான் சிங், துஷாரா விஜயன், பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர்
இசை : ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : ரெனாடைவ்
இயக்கம் : பவுல் ஜார்ஜ்
தயாரிப்பு : கியூப் எண்டர்டெயின்மெண்ட் – சரீப் முகமது

கேரளாவில் உள்ள ஒரு வனப்பகுதியையும், அங்கு வாழும் பழங்குடியின மக்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கடத்தல்காரன் சுனில், அங்கிருக்கும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தி வருகிறார். அவரது இடத்தை பிடிக்க துடிக்கும் கபீர் துகான் சிங், சுனில் கடத்தும் தந்தங்களை காவல்துறை உதவியுடன் கைப்பற்றுவதோடு, அவரது கடத்தல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறார். பறிபோன தனது தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி வர்கீஸை சுனில் களம் இறக்குகிறார். அவரது தந்திரமான திட்டத்தால் சுனில் இழந்த தந்தங்களை பெறுவதோடு, காவல்துறையை ஏமாற்றி விட்டு மீண்டும் தந்தங்களை கடத்துகிறார்.

இதற்கிடையே சுனிலுக்கு உதவி செய்து வந்த நாயகன் ஆண்டனி வர்கீஸ், அவருக்கு எதிராக செயல்படுவதோடு, பழங்குடியின மக்களுக்கு உதவியாகவும் இருக்கிறார். ஆண்டனி வர்கீஸை அழிக்க முடிவு செய்யும் சுனில், தனது எதிரியான கபீர் துகான் சிங் உடன் கைகோர்க்கிறார். அதே சமயம், பழங்குடியின மக்களை ஒன்று திரட்டி கடத்தல்காரர்களுக்கு எதிராக மாபெரும் யுத்தம் நடத்த தயாராகிறார் ஆண்டனி வர்கீஸ். இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றது யார் ?, கடத்தல்காரர்களை அழிக்கும் ஆண்டனி வர்கீஸ் யார் ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸின் தோற்றம், நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஸன் ஆகியவை மோகன்லாலின் ஜெராக்ஸாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருப்பவர், அதிகம் பேசாமல், அளவான நடிப்பின் மூலம் அழுத்தமான கதாபாத்திரத்திற்கு இறுக்கமான முகத்தோடு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சுனில், வழக்கம் போல் தனது முரட்டுத்தனமான வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் கபீர் துகான் சிங், ஸ்டைலிஷ் வில்லனாக கவனம் ஈர்க்கிறார்.

திடீர் எண்ட்ரி கொடுக்கும் துஷாரா விஜயன், ஆக்‌ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார். பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ரெனாடைவ் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அமர்க்களம். கதாபாத்திரங்கள் அறிமுகம் மற்றும் அவர்களுக்கான பில்டப் கொஞ்சம் அதிகம் என்றாலும், அதை ரசிக்கும்படியும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்படியும் ஒளிப்பதிவாளர் ரெனாடைவ் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை சண்டைக்காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்திருப்பதோடு, பில்டப் காட்சிகளுக்கே பில்ட கொடுக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.

சமீர் முகமதுவின் படத்தொகுப்பு காட்சிகளை வேகமாக நகர்த்தியிருப்பதோடு, படத்தின் நீளத்தையும், சண்டைக்காட்சிகளின் நீளட்தையும் குறைத்து படத்தை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறது.

பவுல் ஜார்ஜ், ஜோபி வர்க்கீஸ், ஜெரோ ஜேக்கப் ஆகியோரின் கதை, திரைக்கதை மற்றும் உன்னி.ஆரின் வசனம் ஆகியவற்றை விட ஆக்‌ஷன் காட்சிகள் தான் திரையை அதிகம் ஆட்கொள்கிறது.

இயக்குநர் பவுல் ஜார்ஜின் மேக்கிங் இதற்கு முன்பு வெளியான சில ஆக்‌ஷன் காட்சிகளின் பாதிப்பாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

யானை தந்தம் கடத்தல் மற்றும் அதன் பின்னனியை கதைக்களமாக எடுத்துக் கொண்ட இயக்குநர் பவுல் ஜார்ஜ், அதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லாமல், கமர்ஷியல் மாஸ் ஆக்‌ஷன் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி சில படங்களில் வெற்றியை கொடுத்தாலும், பல இடங்களில் அவரை தடுமாற வைத்திருக்கிறது. இருப்பினும், ஆக்‌ஷன் பட விரும்பிகளை இந்த ‘காட்டாளன்’ நிச்சயம் கவர்ந்திழுப்பான்.

ரேட்டிங் 3 / 5

Comments are closed.