தமிழில் பிரியாமணிக்கு பட வாய்ப்புகள் இல்லை. ஆனால் மற்ற தென்னிந்திய மொழிகளில் மொழிக்கு ஒரு படம் என நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இப்போது மலையாளத்தில் ‘ட்ரூ ஸ்டோரி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஆனாலும் இந்தப்படத்தில் அவருக்கு கிடைத்திருப்பது சாதாரண கேரக்டர் இல்லை. தான் யார் என்பதை, தனக்கான அடையாளத்தை தேடி அலையும் கதாபாத்திரம். அதேபோலபடமும் சாதாரண படம் இல்லை. சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. ஏற்கனவே ‘சாருலதா’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்ததோடு அதில் ஒன்றில் பேயாகவும் மிரட்டிய பிரியாமணி இதையும் ஜஸ்ட் லைக் தட் செய்துவிடுவார் என்று நமக்கு தெரியும்.
இந்தப்படத்தின் கதையை எழுதியிருப்பவர் பிரபல மலையாள எழுத்தாளர் மதுமுட்டம். தமிழில் சந்திரமுகியாக மிரட்டிய மலையாள ‘மணிச்சித்திரதாழ்’ படத்தின் கதாசிரியர் இவர்தான். இப்போது புரிகிறதா படம் எப்படி இருக்குமென்று..?
அதேபோல இந்தப்படத்தை இயக்கும் அனில்தாஸ் ஏற்கனவே ‘பரதன் எஃபெக்ட்’ என்ற சயன்ஸ் ஃபிக்சன் த்ரில்லரை டைரக்ட் பண்ணியவர்தான். என்ன ஆச்சர்யம், அந்தப்படத்தின் கதையும் மதுமுட்டம் எழுதியதுதான். இந்த ‘ட்ரூ ஸ்டோரி’ படத்தின் கதையும் படத்தின் டைட்டிலைப் போலவே உண்மையில் நடந்த ஆச்சர்யமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டதுதானாம். இந்த்ப்படம் வெளியானால் சந்திரமுகியில் ஜோதிகாவுக்கு கிடைத்த பெயர் பிரியாமணிக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதாம்.