ஒரு நாளில் நடக்கும் சம்பவம் என்ற அடையாளத்தோடு படங்கள் வெளிவருவது தற்போது தமிழ்சினிமாவில் அதிகரித்து வருகிறது. இந்தப்பட்டியலில் நிதின் சத்யா ஹீரோவாக நடிக்கும் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படமும் லேட்டஸ்டாக சேர்ந்து இருக்கிறது. ஒரு மிருகக்காட்சி சாலையை சுற்றிப்பார்க்க செல்லும் நான்கு மாணவிகள் வழி தெரியாமல் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கே வேலை பார்க்கும் பாதுகாவலரான நிதின் சத்யா அவர்களை எப்படி மீட்டு அனுப்பி வைக்கிறார் என்பதுதான் கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் நிதின் சத்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கதையை இரண்டு மணி நேரம் சுவராஸ்யமான சம்பவமாக படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் குரு ரமேஷ். இவர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். இந்தப்படத்தை தயாரிக்க ஆரம்பிக்கும் முன் பல பரிசோதனைகளை செய்துவிட்டுத்தான் திருப்தியாக சம்மதித்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அனூப்.
இந்தப்படத்தில் நடிப்பதற்காக உண்மையிலேயே சர்ச் பார்க் கான்வெண்ட்டில் படித்துக்கொண்டிருக்கும் நான்கு மாணவிகளை தேடிப்பிடித்து அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். சென்னையில் உள்ள வண்டலூர் ஜூவிற்கு சென்று பெர்மிஷன் கேட்க, அவர்களோ இதுதான் இங்கே ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டு வருவது முதல்முறை எனக்கூறி அனுமதி தர தயங்கியிருக்கிறாகள். அதனால் படத்தின் 95 சதவீத காட்சிகளை ஹைதராபாத்தில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் படமாக்கியிருக்கிறார்கள். சில காட்சிகளை தலக்கோணம் அருவியில் படமாக்கியிருக்கிறார்களாம். மேலும் இந்தப்படம் மூலம் ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பிடித்திருக்கிறார்களாம்.