இதற்கு முன்னால் எந்த வருடமும் இருந்தது இல்லை என்பதுபோல 2014ஆம் வருட ஆரம்பமே அமர்க்களமாகத்தான் இருக்கப்போகிறது. தைப்பொங்கல் தினத்தன்று அஜீத்தின் ‘வீரம்’, இன்னொரு பக்கம் விஜய்யின் ‘ஜில்லா’ என இரண்டும் ஒரே நாளில் வெளியாகின்றன.
பொங்கலுக்கு வெளியாகும் விஜய், அஜீத்தின் படங்களின் ஓப்பனிங் வசூலை தடை செய்யாமல் இருக்க, ஐந்து நாட்கள் முன்னதாகவே அதாவது ஜனவரி 10ஆம் தேதி ‘கோச்சடையான்’ படம் ரிலீஸாவதாகத்தான் இதற்குமுன் வெளியான தகவல்கள் சொல்கின்றன.
ஆனால் தற்போது அதில் மாற்றம் இருந்தாலும் இருக்கலாம் என தெரிகிறது. காரணம் ரஜினி படம் ரிலீஸாவது என்பதே ஒரு திருவிழா கொண்டாட்டம் மாதிரிதான். அந்த நேரத்தில் மற்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது அந்தக்கொண்டாட்டத்தை பாதியிலேயே மறைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் ‘கோச்சடையான்’ படத்தை தனியாக களம் இறக்கினால் நன்றாக இருக்கும் என யோசித்து வருகிறார்களாம். இருந்தாலும் ஆடியோ ரிலீஸ் நடக்க இருக்கும் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி எது உண்மை என்பது தெரிந்துவிடும்.