இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்தில் பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவன் வேடம் ஜீ.வி.பிரகாஷுக்கு. அவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.
இந்தப்படத்துக்கு இசையமைப்பதும் ஜீ.வி.பிரகாஷ் தான். நீங்கள் நடிக்கும் படத்துக்கு நீங்களே இசையமைப்பது ஏன் என அவரைக் கேட்டால், “முதலில் இந்தப்படத்தில் நான் நடிப்பதாகவே இல்லை. இசை அமைப்பதற்காகத்தான் என்னை அணுகினார் இயக்குனர் மணிநாகராஜ். ஆனால் போகப்போக நீங்கள் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என என்னை கதாநாயகனாக மாற்றியும் விட்டார். படத்தின் கதையில் இசைக்கு மிகப்பெரிய ஸ்கோப் இருந்ததால் நானே இசையமைப்பதாகவும் கூறிவிட்டேன்” என்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.
பள்ளி மாணவர்களைப் பற்றிய கதை என்றாலும் காதலை முன்னிலைப்படுத்துவது போல தெரிகிறதே என இயக்குனர் மணிநாகராஜிடம் கேட்டால், “மாணவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன, அதற்கு என்ன தீர்வு கண்டுபிடிக்கிறார்கள் என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன். மாணவப்பருவத்தில் தோன்றும் உணர்வுகளைத்தான் இதில் காட்டியிருக்கிறேன். அதை காதல் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம் நாமும் அந்த வயதைத் தாண்டித்தானே வந்திருக்கிறோம்” என்கிறார் உஷாராக.