கிரிக்கெட்டை பற்றிய.. ஸாரி… கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலைப்பற்றிய படம் தான் ஜீவா..
விஷ்ணு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மட்டையை பிடிக்க ஆரம்பித்தவர். அப்பா எதிர்ப்பு தெரிவித்தாலும் வளர்ப்பு தந்தை சார்லியின் ஆதரவுடன் கிரிக்கெட்டே உலகமாக சுழல்கிறார். பள்ளிப்பருவத்தில் தன் பக்கத்து வீட்டு மாணவியான ஸ்ரீதிவ்யாவை காதலிக்க, விஷயம் தெரிந்த திவ்யா அப்பாவின் எதிர்ப்பு காதலர்களை பிரிக்கிறது.
சோகத்தில் மிதக்கும் விஷ்ணுவை கிரிக்கெட்டின் பக்கம் திசைதிருப்பி உற்சாகப்படுத்துகிறார் சார்லி.. புதிய கிரிக்கெட் நண்பர்கள் கிடைக்கிறார்கள். கிரிக்கெட் கோச்சின் உதவியுடன் படிப்படியாக கிரிக்கெட்டின் ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டுகிறார் விஷ்ணு.. இந்த நேரத்தில் பிரிந்த காதலியும் வந்து சேர்கிறார்.
ஆனால் ரஞ்சி கோப்பை டீமில் செலக்ட் ஆகும் கனவை, கிரிக்கெட்டில் ஊடுருவியிருக்கும் அரசியல் உடைத்து நொறுக்குகிறது. காதலியின் தந்தையோ திருமணத்திற்கு சம்மதித்தாலும், மதம் மாறவும், கிரிக்கெட்டை விடவும் விஷ்ணுவுக்கு செக் வைக்கிறார். கிரிக்கெட்டா, காதலா, கிரிக்கெட் அரசியலா – ஜெயிப்பது யார் என்பதுதான் க்ளைமாக்ஸ்..
கிரிக்கெட் விளையாட்டில் திறமையால் ஜெயிப்பதாக பல படங்கள் வந்திருக்கின்றன. அதில் உள்ளோடும் அரசியலை மீறி ஒருவனால் ஜெயிக்க முடிகிறதா என்பதை முதன் முறையாக உண்மைக்கு மிக அருகில் நின்று சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்..
கிரிக்கெட்டை பற்றிய படம்.. கதாநாயகன் விஷ்ணு உண்மையிலேயே நல்ல கிரிக்கெட் பிளேயர். சொல்லவா வேண்டும்.. அவருக்கு பிடித்தமான களம் என்பதால் புகுந்து விளையாடுகிறார். அதனாலேயே நம் நம்பகத்தன்மையை சிதைக்காமல் படம் முழுதும் கிரிக்கெட் வீரராகவே பரிணமித்திருக்கிறார். காதலிலும் சரி.. கிரிக்கெட்டிலும் சரி.. அவ்வப்போது தோல்விகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து வெளிவரும் இவரது கதாபாத்திரம் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை டானிக் தருகிறது.
அழகுச்செல்லமாக ஸ்ரீதிவ்யா.. ஸ்கூல் யூனிபார்மில் அவ்வளவு பாந்தம். அதேசமயம் நோ கவர்ச்சி.. அவர் விஷ்ணுவை அண்ணா என கூப்பிடும் ஆரம்பகட்ட காட்சிகள் ரசிக்கவைக்கின்றன. அவர் வரும் காட்சிகளில் கண்களை அவரைவிட்டு அகற்ற முடியவில்லையே சாமி.. விஷ்ணுவின் கூட்டாளியாக வந்து கிரிக்கெட் வீரனாக அசத்தி, இறுதியில் கிரிக்கெட் அரசியலுக்கு பலியாகும் லட்சுமண், ஒரு நடிகர் என்பதை விட துடிப்பான இளம் வீரனாகவே நம் கண்ணுக்கு தெரிகிறார்.
பத்தாவது ஓவரில் களம் இறங்கும் சீனியர் கிரிக்கெட்டராக சூரி.. சமீபத்திய படங்களை சரவெடி கொளுத்திய சூரி, இதில் அவ்வப்போது சீனிப்பட்டசுகளை மட்டுமே கொளுத்திப்போடுகிறார். இருந்தாலும் அதுவும் வெடிக்கத்தான் செய்கிறது. விஷ்ணுவை ஒருதலையாய் விரும்பி, பின் அவரது தோழியாகவே தொடரும் கதாபாத்திரத்தில் சானியாதாரா பளிச்.
வளர்ப்பு தந்தையாக வரும் சார்லி, விஷ்ணுவின் அப்பாவாக வரும் மாரிமுத்து, கிரிக்கெட் கோச், கிரிக்கெட் சங்க தலைவராக வரும் மதுசூதனன் என துணை கதாபாத்திரங்கள் அனைவருமே தங்களது தேர்வை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.
விஷ்ணுவுக்கும் சார்லி வீட்டிற்குமான பிணைப்பு யதார்த்தம் என்றால் அதை விஷ்ணுவின் தந்தை ஏற்றுக்கொள்ளும் பாங்கு மிகவும் நேர்த்தி. ஒரு பாடல் காட்சியில், அதிலும் சில வினாடிகள் மட்டும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் சுரபி வந்துபோவது ஏன்.? அதை எப்படி கவனிக்காமல் விட்டார்கள். இமானின் இசையில் இரண்டு பாடல்கள் அவரது இருப்பை காட்டுகின்றன. அதில் ஒறு பாட்டுக்கு நட்டியை ‘சதுரங்க வேட்டை’ஆடவிட்டிருக்கிறார்கள்.
போட்டிகளில் எல்லாம் அடிக்கடி விஷ்ணுவே வெற்றி பெறுகிறார் என்று நாம் நினைப்பதைவிட, இன்று இந்தியன் கிரிக்கெட் டீமில் வெற்றிகரமாக விளையாடிவரும் ஒரு வீரர் தனது சிறுவயதில் இருந்து கிரிக்கெட் உலகத்தை எப்படி கடந்து வந்திருப்பார் என்கிற நோக்கிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.. கூடவே காதலையும் சேர்த்துக்கொண்டு, ஆனால் அதை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்தி இது முழுக்க முழுக்க விளையாட்டுக்கான படம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
உங்கள் பையன் சரியாக படிக்காமல் கிரிக்கெட் மட்டையை தூக்கிக்கொண்டு சுற்றுகிறானா..? கோபிக்காமல் அவன் ஆர்வத்தை புரிந்துகொண்டு அவனுக்கு ஊக்கம் கொடுங்கள் என்கிற பாடத்தை சொல்கிறது ஜீவா.
Comments are closed.