நடிகர்கள் : சூர்யா, திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, நட்டி, சுவாஸ்திகா, சிவதா, இந்திரன்ஸ்
இசை : சாய் அபயங்கர்
ஒளிப்பதிவு : ஜி.கே.விஷ்ணு
இயக்கம் : ஆர்.ஜே.பாலாஜி
தயாரிப்பு : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு
பிரபலமான வழக்கறிஞராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, லஞ்சம் கொடுத்து தன் வழக்குகளில் வெற்றி பெறுவதோடு, நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து சட்டவிரோதமான வேலைகளையும் செய்யும் ஆர்.ஜே.பாலாஜி, தன்னை மீறி நீதிமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது, என்ற கட்டமைப்பை உருவாக்குகிறார். இதனால், நீதிக்காக போராடுபவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க, அவர்களின் அழுகுரல் கேட்டு அந்த நீதிமன்றத்தில் இருக்கும் கருப்புசாமி சூர்யா, நேரில் வந்து ஆர்.ஜே.பாலாஜியை வெளுக்கிறார்.
வந்திருப்பது கடவுள் என்று தெரிந்தாலும், இங்கே எல்லாமே இப்படி தான், இதை யாராலும் மாற்ற முடியாது. முடிந்தால் நீங்க கடவுளாக அல்லாமல் சராசரி மனிதராக மாற்றிக் காட்டுங்கள், என்று கருப்புசாமி சூர்யாவிடம், ஆர்.ஜே.பாலாஜி சவால் விடுகிறார். அவரது சவாலை ஏற்றுக்கொள்ளும் கருப்புசாமி சராசரி மனிதராக, நீதித்துறையின் அவலநிலையை மாற்ற முயற்சிக்கிறார். அது அவரால் முடிந்ததா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
‘ஜெய்பீம்’ படத்தில் நீதிக்காக போராடும் ஒரு நேர்மையான வழக்கறிஞராக நடித்த சூர்யா, அதே நீதித்துறையில் நடக்கும் அநீதிகளையும், அநீதி இழைப்பவர்களையும் அழிக்கும் கருப்புசாமியாக ஆக்ரோஷமாக நடித்திருப்பதோடு, மதுரை வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்தில் உணர்ச்சிகரமாகவும் நடித்திருக்கிறார்.
பேபி கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, மாஸாக அறிமுகமாகி, மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
வழக்கறிஞராக நடித்திருக்கும் திரிஷா, கதாநாயகியாக காதல் மற்றும் டூயட் பாடவில்லை என்றாலும், திரைக்கதையோடு பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வருகிறார்.
நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி, திருட்டு போன தன் தங்க நகைகளை மீட்க போராடும் கேரளத்தவராக நடித்திருக்கும் இந்திரன்ஸ், சுவாசிகா, சிவதா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பின் மூலம் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். காட்சிகளில் இருக்கும் பிரமாண்டம், கிராபிக்ஸிலும் இருப்பது காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சாய் அபயங்கரின் இசை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது. படத்தொகுப்பாளர் கலைவாணன், இயக்குநர் சொன்ன கதையை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
நீதித்துறையில் நிலவும் ஊழல் மற்றும் விலைபோகும் நீதியரசர்கள், நீதிமன்றத்தின் எழுதப்படாத விதிமுறைகள் அதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் என்று பல விசயங்களை மிக தைரியமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, அதை கடவுள் பின்னனியில் வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார்.
மக்களின் கடைசி நம்பிக்கையாகவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூணாகவும் விளங்க வேண்டிய நீதிமன்றங்களின் தற்போதைய நிலை அதன் பின்னணி பற்றி உண்மைக்கு நெருக்கமாக பேசியிருக்கும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் தடம் புரண்ட நீதித்துறையில் நடக்கும் அநீதிகளுக்கு ’கருப்பு’ மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.