’வாரண்ட்’ இணையத் தொடர் விமர்சனம்

17

நடிகர்கள் : பிரசாந்த் பாண்டியராஜ், நர்மிதா.எம்.வி, சாயா தேவி, அருள்ஜோதி, பாலாஜி சக்திவேல், கெளசல்யா, அருள்தாஸ், மீனா, ஹெலோ கந்தசாமி
இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : அசோக் குமார்
இயக்கம் : விக்னேஷ் நடராஜன்
தயாரிப்பு : சிவன் பிக்சர்ஸ், எஸ் ஸ்டியோஸ் – பிரசாந்த் பாண்டியராஜ், பி.விஷால், பி.எம்.ஆதீஷ்வர்

தன் பெற்றோர் விருப்பப்படி அரசு பணியில் சேரும் முயற்சியில் ஈடுபடும் நாயகன் பிரசாந்த் பாண்டியராஜ், அது முடியாமல் போக காவல்துறையில் பணியாற்றும் உறவினர் மூலம் காவலராகி விடுகிறார். அரசு வேலைக்காக காவல்துறையில் சேரும், பிரசாந்த் பாண்டியராஜ் அதன் சிஸ்டம் மற்றும் பணியை சரிவர செய்ய முடியாமல் திணறுவதோடு, அங்கிருக்கும் ஈகோ உள்ளிட்ட எதிர்மறை விசயங்களால் பாதிக்கப்பட்டு, மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி அவமானப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் காவல்துறை பணியே வேண்டாம் என்ற முடிவு எடுக்கும் பிரசாந்த் பாண்டியராஜ், தன்னை அலட்சியமாக பார்த்து அவமானப்படுத்துகிறவர்களுக்கு தான் யார்? என்பதை நிரூபிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் அவருக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்குகிறது. அது என்ன ? அதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா ? இல்லையா ? என்பது தான் ‘வாரண்ட்’ தொடரின் மீதிக்கதை.

‘விலங்கு’ இணையத் தொடர் மூலம் திரையில் சொல்லப்படாத காவல்துறை உலகத்தின் ஒரு பகுதியை உண்மைக்கு நெருக்கமாகவும், இயல்புத்தன்மையோடும் சொல்லி கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இம்முறை கதையாசிரியர் மற்றும் கதையின் நாயகனாக அதே காவல்துறையின் மற்றொரு பக்கத்தை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி வியக்க வைத்திருக்கிறார்.

அப்பாவியான முகம், அமைதியான சுபாவம் கொண்ட ஒரு வெகுளித்தனமான இளைஞர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொறுந்தியிருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ், தன் நிலையை மாற்றுவதற்காக எடுக்கும் அதிரடி அவதாரம் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். சாதாரண மனிதராக இயல்பாக அனைத்தையும் கடந்து போகிறவர், தான் யார் ? என்பதை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும், அதில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் கோட்டை கருப்பசாமி என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறது.

நாயகிகளாக நடித்திருக்கும் நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள்.

பிரசாந்த் பாண்டியராஜின் தந்தையாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், அம்மாவாக நடித்திருக்கும் கெளசல்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருள்தாஸ், காவலராக நடித்திருக்கும் ஹெலோ கந்தசாமி, கொடைக்கானல் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

அசோக் குமாரின் ஒளிப்பதிவு காவல் நிலையம் மற்றும் காவலர்களை இயல்பாக காட்சிப்படுத்தி, ஒரு காவல் நிலையத்திற்குள் பயணிக்கும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

சாம்.சி.என் பின்னணி இசை வழக்கம் போல் சற்று தூக்கலாக இருந்தாலும், திரைக்கதையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

ஆர்.ராமரின் படத்தொகுப்பு இணையத் தொடருக்கான விறுவிறுப்புடனும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை கடத்தும் விதத்திலும் பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.

பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன் ஆகியோரது கதை மற்றும் திரைக்கதை திரையில் சொல்லப்படாத காவல்துறை பணியின் பின்னணியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. இலகிய மனம் படைத்தவர்களையும் வன்மம் மிக்கவர்களாக மாற்றக்கூடிய பணிச்சுமை மிக்க காவலர்களது பிரச்சனைகளை மட்டுமே பேசாமல், சாமானிய மக்கள் மீது தங்களது அதிகாரத்தை காட்டும் காவலர்கள், பணம் படைத்தவர்கள் மற்றும் உயர் மனிதர்களிடம் அத்தகைய அதிகாரத்தை காட்டுவதில்லையே ஏன்? என்ற கேள்விக்கு மூலம் அதிகார போதையில் மிதக்கும் காவலர்களுக்கு சாட்டையடியும் கொடுத்திருக்கிறார்கள் கதையாசிரியார்கள் பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன்.

காவல் மரணம் என்ற ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு சுமார் நான்கரை மணி நேரம் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்த்துவிடும் இயக்குநர் விக்னேஷ் நடராஜன், ஒவ்வொரு அத்தியாயங்களையும் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருப்பதோடு, உணர்வுப்பூர்வமாகவும் காட்சிகளை வடிவமைத்து தொடரை இயக்கியிருக்கிறார்.

‘விலங்கு’ இணையத் தொடர் மூலம் திரையில் சொல்லப்படாத காவல்துறை உலகத்தின் ஒரு பகுதியை உண்மைக்கு நெருக்கமாகவும், இயல்புத்தன்மையோடும் சொல்லி கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இம்முறை கதையாசிரியர் மற்றும் கதையின் நாயகனாக அதே காவல்துறையின் மற்றொரு பக்கத்தை ’வாராண்ட்’ மூலம் உண்மைக்கு நெருக்கமாக சொல்லி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 4/5

Comments are closed.