இவன் வேற மாதிரி – விமர்சனம்

124

நாட்டில் நடக்கும் அநியாயங்களை தனி ஒருவனாலும் தட்டிக்கேட்க முடியும். ஆனால் அதற்கு வேற மாதிரி யோசிக்கவேண்டும்.. இந்த லைனைப் பிடித்துக்கொண்டு நூலில் பூச்சரம் தொடுத்த மாதிரி அழகான ஆக்‌ஷன் மாலையை தொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன்.

சட்டக்கலூரி மாணவர்களுக்குள் மோதலைத் தூண்டிவிடுகிறார் சட்டத்துறை அமைச்சர் ஹரிராஜ். அமைச்சருக்கு வேறுவிதமாக பாடம்புகட்ட நினைக்கும் விக்ரம் பிரபு அவரது தம்பி வம்சியை கடத்திச்சென்று ஐந்து நாட்கள் சோறு தண்ணியில்லாமல் அடைத்து வைக்கிறார். வெளியே அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டதும் வம்சியை விடுவிக்கிறார் விக்ரம் பிரபு.

தன்னைக் கடத்தியவன் முகம் யாரென தெரியாமல் கொலைவெறியுடன் வலைவீசித்தேடும் வம்சியிடம், விக்ரம்பிரபுவின் காதலி சுரபி சிக்குகிறார். சுரபி மூலமாக விக்ரம்பிரபுவைக் கண்டுபிடிக்க வம்சி முயல, இன்னொரு பக்கம் சுரபியைக் காணாமல் தேடும் விக்ரம் பிரபு வம்சிதான் சுரபியை கடத்தி இருக்கவேண்டும் என உணர்கிறார். யார் கையில் யார் சிக்கினர்கள், சுரபி காப்பற்றப்பட்டாரா என்பது பரபரக்கும் க்ளைமாக்ஸ்.

விறுவிறு ஆக்‌ஷன் கதைக்கு ஜம்மென்று பொருந்துகிறார் விக்ரம் பிரபு. காதல் காட்சிகளில் மென்மையும் ஆக்‌ஷன் காட்சிகளில் வன்மையும் காட்டுகிறார். குறிப்பாக வம்சியுடன் மோதும் ஆரம்பகட்ட மற்றும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளில்… ஹேட்ஸ் ஆஃப் விக்ரம் பிரபு.

கதாநாயகி சுரபி.. அவ்வளவு பாந்தமாக இருக்கிறார். பார்க்க பார்க்க அலுக்காத முகம்.. இயல்பான நடிப்பு.. விக்ரம் பிரபுவும் அவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் காதல் காலாட்டாக்கள். ஆனால் க்ளைமாக்ஸில் அந்த பத்து நிமிடம் சுரபி எடுத்திருக்கும் ரிஸ்க்.. அப்பப்பா நம்மை பதைபதைக்க வைக்கிறது.

வில்லனாக வரும் வம்சி கிருஷ்ணா.. இடைவேளை வரை தான் பூட்டிவைக்கப்பட்டிருக்கும் பாத்ரூமுக்குள்ளேயே உறுமுவதும் இடைவேளைக்குப் பிறகு விக்ரம் பிரபுவை தேடும் படலத்தில், கையில் சிக்கியவர்களை எல்லாம் துவம்சம் செய்வதும் என இன்னொரு டாங்லீயாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக இறுதிப்பகுதியில் மட்டுமே வரும் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பில் துடிப்பு காட்டியிருக்கிறார். அமைச்சராக வரும் ஹரிராஜ், சுரபியின் அம்மாவாக வரும் சார்மிளா, அந்த இரண்டு வாயாடி சுட்டிப்பெண்கள் என கதாபாத்திர தேர்வு கன கச்சிதம். இதுதவிர படத்தில் பதினெட்டு மாடிக்கட்டிடம் ஒன்றும் கேரக்டராகவே படம் முழுக்க வருகிறது.

சி.சத்யாவின் உறுத்தாத இசையில் பாடல்கள் சுகம், மிரட்டலான பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு பலம் சேர்க்கிறது. சண்டைக்காட்சிகளில் சக்தியின் கேமரா ஜாலம் காட்டியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அனைவரையும் சரியான ட்ரில் வாங்கியிருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர்.

எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். முதல் படத்திலிருந்து தனது இரண்டாவது படத்தின் கதைக்களத்தை வித்தியாசப்படுத்தியதோடு தன்னால் சூப்பரான ஆக்‌ஷன் படத்தையும் தர முடியும் என நிரூபித்தும் இருக்கிறார். அதோடு சமூகத்தில் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார். காமெடிக்கென்று தனியாக காமெடி நடிகர்களைத் தேடாமல், அதையும் விக்ரம் பிரபு, சுரபி இருவரையும் வைத்தே சமாளிக்கும் தில் இயக்குனருக்கு இருக்கிறது.

சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மாடியிலிருந்து வில்லன் கொலை செய்த நபரை யாரும் தேடி வராதது, வில்லனும் ஹீரோவும் தேர்ந்தெடுக்கும் கட்டடங்கள் எதிலும் காவலுக்கு ஒரு ஆள் கூட இல்லாதது, வில்லன், போலீஸாரையே சர்வசாதாரணமாக் குத்திவிட்டு தப்பிப்பது என சில இடங்களில் சிறு சிறு ஓட்டைகள் இருந்தாலும் பரபரப்பான திரைக்கதை அவற்றையெல்லாம் மறக்கடித்து விடுகிறது.

‘இவன் வேற மாதிரி’ – எந்தவித அலுப்பும் இல்லாமல் ஜாலியாக பார்த்து ரசிக்கலாம்.

நடிகர்கள்: விக்ரம் பிரபு, சுரபி, கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணா, ஹரிராஜ்
இசை: சத்யா
ஒளிப்பதிவு: சக்தி
இயக்கம்: ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன்.

Leave A Reply

Your email address will not be published.