ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் அடிக்கும் பல்டியை விட ‘நய்யாண்டி’ பட விவகாரத்தில் ‘நஸ்ரியா’ அடித்த பல்டிதான் இந்தவார ஹாட் டாபிக். இயக்குனர் சற்குணம் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதோடு தயாரிப்பாளருடன் சேர்ந்து மீடியாவை சந்தித்தார். அத்துடன் “நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன்” எனவும் திருவாய் மலர்ந்திருக்கிறார் நஸ்ரியா. அப்பப்பா.. இந்த இரண்டு நாட்களில் அவர் பண்ணிய ஆர்ப்பாட்டங்கள் இருக்கிறதே.. அனைத்தும் ‘நய்யாண்டி’ படத்துக்கு உணமையிலேயே எக்ஸ்ட்ரா பப்ளிசிட்டிதான்.
“நான், என் சம்பந்தப்பட்ட ஆபாசக்காட்சியை நீக்குவதிலும் டூப் போடப்பட்டு எடுக்கப்பட்ட அந்தக்காட்சியை என் அனுமதி இல்லாமல் எப்படி வைக்கலாம் என்று கோபப்படுவதிலும் மட்டுமே கவனம் வைத்திருந்தேன். ஒரு படத்தின் செலவில் என்னை மட்டும் விளம்பரப்படுத்தும் விதமாக முட்டாள்தனமாக நடந்துகொண்டேனே தவிர, இந்தப்படம் நூறு பேரின் உழைப்பு என்ற கோணத்தில் யோசிக்க தவறிவிட்டேன். நிச்சயமாக இதை நான் பப்ளிசிட்டிக்காக செய்யவில்லை. காரணம் தனுஷ் இருக்கும்போது அதைவிட படத்திற்கு வேறு என்ன பப்ளிசிட்டி வேண்டும்?
நிறையபேர் இதை தவறாக புரிந்துகொண்டு என்மீது கோபப்பட்டிருப்பீர்கள். என்னைப்போன்ற சிறிய நடிகைக்கு நீங்கள் முதல் படத்திலேயே காட்டிய அன்பும் வரவேற்பும் அளவுக்கதிகமாக இருக்கும்போது எனக்கு எதற்கு விளம்பரம்?. தற்போது ட்ரெய்லரில் இடம்பெற்ற அந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டுவிட்டது. நய்யாண்டி படம் அருமையான பொழுதுபோக்கு படமாக வந்திருகிறது. அனைவரும் தவறாமல் பாருங்கள்” என்று வேண்டுகோள் வைத்துவிட்டு இரண்டு நாட்கள் மீடியாவுக்கு தீனிபோட்ட திருப்தியில் அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார் நஸ்ரியா. பின்னே.. இதற்குத்தானே ஆசைப்பட்டார் நஸ்ரியா?