வணக்கம் சென்னை – விமர்சனம்

82

தேனி மாவட்டத்தில் இருந்து ஐ.டி.கம்பெனியில் வேலை பார்க்க சென்னை வருகிறார் சிவா. லண்டனில் இருந்து போடோகிராபி கலைக்காக சென்னை வருகிறார் பிரியா ஆனந்த். இவர்கள் இரண்டு பேருக்குமே ஒருவருக்கு தெரியாமல் மற்றவருக்கு ஒரே வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார் புரோக்கர் சந்தானம். வீடும் கூட அவருடையது இல்லை என்பது வேறு விஷயம். வேறு வழியின்றி ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக தங்குகிறார்கள் சிவாவும் பிரியா ஆனந்தும்.

ஒரு கட்டத்தில் சிவாவுக்கு திடீரென பிரியா மீது காதல் வருகிறது. ஆனால் பிரியாவுக்கோ ஏற்கனவே லண்டன் மாப்பிள்ளை நிச்சயமாகி இருக்கிறார். அவரும் பிரியாவை தேடி சென்னை வருகிறார். அதற்கப்புறம் என்ன நடக்கும்.. சிலபல சம்பவங்களுக்குப் பிறகு சிவா மீது பிரியாவுக்கு காதல் வரும். லண்டன் மாப்பிள்ளை தியாகி விடுவார் என்று நீங்கள் யூகித்தால் அது சரிதான்.

சிவா தேனியிலிருந்து சென்னைக்கு வருகிறார் என்பது மட்டும்தான் அவரது கேரக்டரில் புதிதாக தெரிகிறது. மற்றபடி வழக்கம்போல தில்லு முல்லு, யாயா படங்களில் போட்டிருந்த அதே சட்டையைத்தான்(கேரக்டரை சொன்னோம்) மறுபடியும் துவைத்து போட்டிருக்கிறார். எல்லா விஷயங்களையும் சிவா காமெடியாகவே செய்து நாம் பார்த்து விட்டதால், அவர் காதல் செய்யும்போதும் அவரது காதல் தோல்வி அடையும் நிலைக்குப் போகும்போதும் நமக்கு கொஞ்சம்கூட ஃபீலிங்ஸ் ஏற்படவே இல்லை.

பேரழகு என்று சொல்லாவிட்டாலும் பிரியாவிடம் ஏதோ ஒரு வசீகரம் இருக்கவே செய்கிறது. அது அவரது ஒவ்வொரு செய்கையிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் சிவாமீது திடீரென காதல்வயப்படுவதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இடைவேளை விடும்போது எண்ட்ரி கொடுக்கும் ஹவுஸ் புரோக்கர் சந்தானம், அடுத்து எண்ட் கார்டு போடும்வரை வந்து கலகலப்பூட்டுகிறார். யாரோ ஒருவர் வீட்டை இவர் வாடகைக்குவிட்டு அதிலும் தில்லுமுல்லு பண்ணுவது ‘கோயமுத்தூர் மாப்பிள்ளை’ குசும்பு. ஆனால் அதன்பின் வழக்கம்போல நண்பனின் காதலுக்கு ஐடியா கொடுக்கும் ‘மோக்கியா’ வேலையை இதிலும் தவறாமல் ஆரம்பித்து விடுகிறார்.

நாசர், ஊர்வசி, ரேணுகா, மனோபாலா, நிழல்கள் ரவி அனைவரும் இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கூட மனதில் நிற்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவில் சென்னையை விட சில காட்சிகளில் மட்டுமே வரும் இயற்கை எழில்கொஞ்சும் போடிமெட்டு மலைப்பகுதி கிராமம் அவ்வளவு அழகு. அனிருத்தின் இசையில் ‘எங்கடி பொறந்த’ பாடல் கேட்க சுவராஸ்யமாக இருக்கிறது.

படத்தை இயக்கியிருக்கும் கிருத்திகா உதயநிதிக்கு இது டைரக்‌ஷனில் கன்னி முயற்சி. ரசிகர்களை சிரிக்கவைக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்து அதில் வெற்றிக்கோட்டையும் தாண்டியிருக்கிறார். குறிப்பாக பிரியா ஆனந்த் சென்னைக்கு வந்து இறங்கி கால் டாக்ஸியில் பயணிக்கும்போது அந்த ட்ரைவருக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடும் காட்சியிலேயே ஒரு இயக்குனராக சபாஷ் வாங்கி விடுகிறார் கிருத்திகா. இதுவரை சமீபத்தில் தமிழ்சினிமாவிற்குள் நுழைந்து படம் இயக்கிய பெண் இயக்குனர்களில், போரடிக்காமல் ஒரு முழுமையான காமெடி படத்தை தந்திருக்கும் கிருத்திகா உதயநிதியை தாராளமாக பாராட்டலாம்.

Leave A Reply

Your email address will not be published.