சினிமாவில் பலவிதமான செண்டிமெண்ட்டுகள் உண்டு. நிறைய பேர் அந்த செண்டிமெண்ட் தான் தங்களது படங்களின் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறார்கள். அதில் நியூமராலஜியும் அடக்கம். பலரும் தங்களது பெயரை நியூமராலஜிப்படி மாற்றி வைத்துக்கொள்கிறார்கள். சமீபத்திய உதாரணம் அனுஷா என பெயர் மாற்றிக்கொண்ட நடிகை சுனைனா. அதேபோல படங்களின் பெயரிலும் நியூமராலஜி புகுந்து விளையாடுகிறது.
இதற்காக படத்தின் பெயரை மாற்றுவதில்லை. அந்தப்படத்தின் ஆங்கில எழுத்துக்களில் தேவைப்படும் இடத்தில் எக்ஸ்ட்ராவாக ஒரு எழுத்தை சேர்த்து விடுகிறார்கள். படம் சக்சஸ் ஆனால் இதுதான் காரணம் என சொல்லியும் வருகிறார்கள். இந்த செண்டிமெண்ட்டிற்கு சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’ கூட தப்பவில்லை என்பதுதான் ஆச்சர்யம். ‘கோச்சடையான்’ ஆங்கில டைட்டிலில் ஏற்கனவே வரும் ஒரு ‘i’ உடன் எக்ஸ்ட்ராவாக இன்னொரு ‘i’ சேர்த்திருக்கிறார்கள்(kochadaiiyaan).
இதுபற்றி நியூமராலஜியில் நிபுணரான சஞ்சய் பி.ஜுமானி என்பவர் சொல்லும்போது “நியூமராலஜி என்பது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சல்மான்கான் நடித்த தபாங்(dabangg) படத்தின் டைட்டிலில் ஒரு ‘g’யை எக்ஸ்ட்ராவாக சேர்த்தோம். படமும் சூப்பர்ஹிட். இன்றுவரை சல்மான் கானும் நம்பர் ஒன் இடத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறார். தற்போது அவர் நடித்துவரும் ‘மெண்டல்’ படம் கூட ‘ஜெய்ஹோ’ என பெயர் மாற்றப்பட்டது கூட நியூமராலஜி அடிப்படையில்தான்” என்கிறார்.
மேலும் இதற்கு வலு சேர்க்கும் உதாரணங்களையும் அவர் அடுக்குகிறார். “அதேபோலத்தான் தோல்விப்படங்களாக கொடுத்துவந்த அக்ஷய் குமாருக்கு அவரது 45ஆவது வயதில் தொடர் வெற்றிகளாக வரும் என்று சொன்னோம். காரணம் கூட்டுத்தொகை 9. அதேபோல அவரது படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகின்றன. ‘கோச்சடையான்’ படத்தில் சூப்பர்ஸ்டார் நடித்திருந்தாலும் கூட அவரும் இந்த நியூமராலஜியை மதிப்பதால் இந்தப்படத்திலும் மேற்கூறிய மாற்றத்தை செய்துள்ளோம். ‘கோச்சடையான்’ மிகப்பெரிய வெற்றியைப்பெறும்” என்கிறார் நம்பிக்கையாக.