சிறுத்தை சிவா டைரக்ஷனில் அஜீத் நடிக்கும் ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வடிவமைக்கிறார். இந்த சூழ்நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தெலுங்கு ஸ்டண்ட் யூனியனைச் சேர்ந்தவர்கள் தங்களது சங்கத்தை சேர்ந்த்வர்களுக்கும் படத்தில் வேலை கொடுக்கவேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள்.
தங்களது மாநிலத்தில் இன்னொரு மொழித்திரைப்படம் படமாக்கப்படும்போது தங்களது ஸ்டண்ட் கலைஞர்களையும் 70-30 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும் என தெலுங்கு ஸ்டண்ட் யூனியன் நீண்ட நாட்களாகவே பிரச்சனை செய்துவருகிறது. அதாவது தங்களது யூனியனை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞர்களை 30 சதவீதம் பயன்படுத்த வேண்டும் எனபதுதான் அவர்கள் விதிக்கும் நிபந்தனை. இதனை வலியுறுத்தித்தான் ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் வந்து போராட்டம் நடத்தி படப்பிடிப்பை நடக்கவிடாமல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இரண்டு ஸ்டண்ட் யூனியனையும் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. தமிழ் ஸ்டண்ட் கலைஞர்களும் இதனால் மூட் அவுட் ஆகினர். நிலைமையை கவனித்த சிறுத்தை சிவா ஸ்டண்ட் காட்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு அஜீத், தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க ஆரம்பித்துவிட்டாராம். சிக்கல் எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை.