என் வழி தனி வழி – விமர்சனம்

237

 

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஆர்.கே, தனது தலைமை கொடுக்கும் உத்தரவின்படி ரவுடிகளை போட்டுத்தள்ளுகிறார். இதனால் பலரின் பகையையும் சம்பாதிக்கிறார். மேலும் தன அம்மாவையும் எதிரிகளின் துப்பாக்கி குண்டிற்கு பலி கொடுக்கிறார்.

போலீஸ் தலைமை மாறி ராதாராவி அந்த இடத்திற்கு வர, ஆர்.கேவின் கைகள் கட்டப்படுகின்றன. எம்.பியை கொன்றதாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு அவர் இடத்துக்கு ஆசிஷ் வித்யார்த்தி வருகிறார். ஆர்.கே உண்மைகளை தேடி தலைமறைவாக, அவரையே என்கவுண்டரில் போட்டுத்தள்ள ஆசிஷுக்கு உத்தரவு போடுகிறார் ராதாரவி. ஆசிஷின் என்கவுண்டரில் இருந்து ஆர்.கே தப்பினாரா ? தன் தாயை கொன்றவர்களை பழி வாங்கினாரா என்பது க்ளைமாக்ஸ்..

யூனிபார்ம் போடாத என்கவுண்டர் போலீஸ் கேரக்டர் ஆர்.கேவுக்கு சரியாகவே பொருந்துகிறது. தலைமைக்கும், அரசியல்வாதிகளுக்கும் பணிந்துபோகும் இயலாமையை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் அசத்தவே செய்கிறார்.

தமிழ் சினிமாக்களில் கிராமத்து முறைப்பெண், பட்டணத்து மாமனை மயக்க என்னவெல்லாம் பண்ணுவாளோ அதையெல்லாம் அளவாக, அழகாக பண்ணுகிறார் பூனம் கவுர். என்கவுண்டர் டீமில் கவர்ச்சியாக வந்து, ஆனால் கவர்ச்சி காட்டாத மீனாட்சி தீக்சித்தும் பாஸ்மார்க் பெறுகிறார்.

பாந்தமான தாயாக சீதாவும், கொடூர முகம் காட்டும் வில்லியாக ரோஜாவும் நேர்த்தியான நடிப்பு. அரசியல்வாதியாக வரும் ரோஜாவின் கதாபாத்திரம் எதிர்பாராத ட்விஸ்ட்டை ஏற்படுத்துவதோடு  உண்மைச்சம்பவத்தின் பிரதிபலிப்பாக பின்னப்பட்டிருப்பதும் ஆச்சர்யம் ப்ளஸ் தைரியமான விஷயம் தான்.

வெளிநாட்டில் உட்கார்ந்தபடியே வில்லத்தனம் பண்ண முயற்சித்திருக்கும் ‘ஆஹா’ ராஜீவ் கிருஷ்ணாவின் கதாபாத்திரம் நம்மை இம்ப்ரெஸ் பண்ண மறுக்கிறது. போலீஸ் உயர் அதிகாரியான ராதாரவியின் குள்ளநரித்தனமும், அடாவடி போலீஸாக வரும் ஆசிஷ் வித்யார்த்தியின் நடிப்பும் கதைக்கு வேகம் கொடுக்கின்றன.  கூடவே ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை அதற்கு துணை நிற்கிறது.

போலீஸ் கதையை படமாக்குவது என்பது இயக்குனர் ஷாஜி கைலாஷுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்தப்படத்தில் என்கவுண்டர் விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அரசியல்வாதி, ரவுடி வில்லன் என ஒரே ரூட்டில் பயணிக்காமல், உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு பணிந்து வேலை பார்த்து சிக்கலில் மாட்டும் உண்மையான அதிகாரிகளின் நியாயத்திற்காக குரல் கொடுத்திருக்கிறார்.

தனது தாயின் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் ஆர்.கே, இறுதியாக நீதிமன்றத்தின் முன்வைக்கும் வாதம் தான் லாஜிக்காக இடிக்கிறது.. ராணுவத்தை நாட்டின் பிறசேவைகளிலும் ஈடுபடுத்தினால் லஞ்ச ஊழல் ஒழியும் என ஆர்.கே சொல்லும் பாயிண்ட் சரியானது தான் என்றாலும் இந்தப்படத்தின் க்ளைமாக்ஸுடன் ஒட்டாமல் தனித்தே தெரிகிறது.. ஷாஜி கைலாஷின் முந்தைய போலீஸ் படங்களில் இருக்கும் ‘பவர்’ இதில் ஆர்.கேவுக்கு குறைவாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை..

லாஜிக்காக சில கேள்விகள் எழுந்தாலும் போரடிக்காமல், விறுவிறுப்பான ஒரு படத்தை தான் ஷாஜி கைலாஷ் – ஆர்.கே கூட்டணி மீண்டும் கொடுத்திருக்கிறார்கள்..

Comments are closed.