நமது தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களை பொறுத்தவரை ஏதோ ஒரு வகையில், சிலசமயம் நட்புக்காக கூட மற்ற மொழிப்படங்களில் ஒரு சில காட்சிகளிலாவது தலைகாட்டி விடுவார்கள். ஆனால் தற்போது இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்புக்கு இன்னும் ஒரு தமிழ்ப்படத்தில் கூட நடிக்கவில்லையே என்கிற ஏக்கம் மனதிற்குள் அரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
தமிழ்த்திரையுலகில் நாற்பது வருடமாக தனது நண்பர்களாக இருக்கும் முன்னணி ஹீரோக்களிடம் தனக்கு ஒரு காட்சியிலாவது வந்துபோகிற மாதிரி வாய்ப்பு தந்தால் கூட போதும் என்று கோரிக்கை வைத்துப் பார்த்தும் பலனில்லை. சூப்பர்ஸ்டாரை அப்படியெல்லாம் சாதாரணமாக காட்டிவிட நம்மவர்கள் ஒத்துக்கொள்வார்களா என்ன?
அப்படியும்கூட எந்திரன் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அவரைத்தேடி வந்தது. படத்தில் புரஃபஸர் போராவாக வில்லன் ரோலில் டேனி டென்சொங்பா நடித்தாரே, அந்த வில்லன் கேரக்டருக்கு. அமிதாப்பும் அதற்கு சந்தோஷமாக முன்வந்தார். ஆனால் ரஜினிதான், “உங்களை வில்லனாக அந்த வேடத்தில் என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. இதைவிட அட்டகாசமான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு உங்களைத்தேடி வரும்” என அன்புத்தடை போட்டுவிட்டாராம்.