
பள்ளி மாணவன் பாலாஜி தனது சக மாணவி கார்த்திகாவை காதலிக்கிறான்.. ஆனால் கார்த்திகாவோ அவனது நண்பன் ஜீவாவை காதலிக்கிறாள்.. இவர்களது காதல் வீட்டிற்கு தெரியவர, காதலர்களை பிரித்து போலீசார் மூலம் எச்சரிக்கை விடுக்கிறார்கள் கார்த்திகா வீட்டார்.
ஆனால் தொடர்ந்து ஜீவா காதலில் தீவிரம் காட்டவே, தேர்வு முடிந்தது கார்த்திகாவுடன் கோவைக்கு குடிபோகின்றனர் அவளது பெற்றோர். இந்த விஷயத்தை கார்த்திகா, பாலாஜியிடம் சொல்லிவிட்டு செல்ல, அவனோ பொறாமையால் இதை மறைப்பதோடு ஜீவாவுக்கு அவள் சென்னை போய்விட்டதாக தவறான தகவலையும் தருகிறான்.
இறுதியாக கார்த்திகாவை கோவையில் கண்டுபிடிக்கும் ஜீவா தன்னிடம் அவள் கொண்டுள்ள காதலை உறுதிப்படுத்த ஒரு காரியத்தை செய்யச்சொல்லி கேட்கிறார்.. குழம்பி நிற்கும் கார்த்திகா ஒரு முடிவெடுக்கும் நிலையில், விதி ஜீவாவை வேறு முடிவு எடுக்க வைக்கிறது..
எண்பதுகளில் தமிழ்சினிமா பார்த்த அழகான காதல் கதைதான்.. பள்ளிப்பருவத்தில் வரும் காதல்.. அதற்கு பெற்றோர் காட்டும் எதிர்ப்பு என தமிழ்சினிமா இயக்குனர்கள் சலித்து எடுத்த கதைதான். ஆனால் அதை காட்சிப்படுத்தியதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் துணிச்சலான முடிவு எடுத்ததிலும் தனித்து தெரிகின்றது இந்த ‘அமரகாவியம்’.
கதாநாயகன் ஜீவாவாக ஆர்யாவின் தம்பி சத்யா.. காதல் காட்சிகளை விட, இவர் காதல் சைக்கோவாக மாறும்போது கதாபாத்திரத்திற்கு அவரது முகம் நன்றாக ஒத்துழைக்கிறது.. அதிலும் காதலுக்கே உரிய முட்டாள்தனத்துடன் கூடிய முரட்டுத்தனத்தை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்..
கார்த்திகாவாக கேரளா நடிகை மியா.. அழகோ அழகு.. இந்தக்கதையின் ஜீவனே அவரது அசரடிக்கும் நடிப்புதான்.. வெட்கம், காதல், கோபம், குறும்பு, சோகம் என நொடிக்கு நொடி முகபாவங்களை மாற்றுவதோடு சமயங்களில் பல காட்சிகளில் கண்களாலேயே பேசிவிடுகிறார். அதிலும் காதல் காட்சிகளில் ஹைக்கூ.. அந்த க்ளைமாக்ஸ் காட்சி.. சான்சே இல்லை.. அசத்திவிடுகிறார் அசத்தி. அடுத்ததாக இனி தமிழ் ரவுண்டுக்கு ரெடியாகிறார் மியா.. அதனால் லட்சுமி மேனன்கள் எல்லாம் உஷார்…
சத்யா, மியா இருவரின் பெற்றோர்களாக வருபவர்கள் யதார்த்த மனிதர்களாக உலா வருகிறார்கள். கேண்டீன் நடத்துபவராக வரும் தம்பி ராமையாவுக்கு காமெடி செய்ய வாய்ப்பு குறைவுதான். நண்பனாக வரும் அனந்த நாக்கின் வில்லத்தனம் பரவாயில்லை.
கொஞ்ச வருடங்களாக தமிழ்சினிமா மறந்து போன ஊட்டியை முழுப்படத்திலும் அலுக்காமல் சுற்றிக்காட்டுகிறது ஜீவா ஷங்கரின் கேமரா.. இயக்குனரும் அவரே என்பதால் தேவையானதை தேவையான அளவில் காட்டியிருக்கிறார்.. அதற்கு துணையாக ஜிப்ரானின் பின்னணி இசை கூடவே கைகோர்த்தபடி பயணித்திருக்கிறது.
ஸ்லோவாக கதை நகர்ந்தாலும் போரடிக்காமல் நகர்வது திரைக்கதையின் பிளஸ்.. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்பதால் படத்தின் கடினமான முடிவை நம்மால் ஏற்கவும் முடியவில்லை.. ஒதுக்கி தள்ளவும் முடியவில்லை.. ‘அமரகாவியம்’ இளசுகளுக்கு உற்சாக டானிக் தரும் என்பதில் மாற்று கருத்தில்லை.
Comments are closed.