தேவதைகளின் நகரம் கேரளா.. ஆனால் அதன் போக்குவரத்து அமைப்போ நரகம் என்று சொல்லும்படி நாளுக்கு நாள் அவல நிலை அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது.. எல்லாம் போக்குவரத்து கமிஷனராக ரிஷிராஜ் சிங் என்பவர் பதவி ஏற்கும் வரைதான். ரிஷிராஜ் பதவியேற்றதும் சாட்டையை சுழற்ற இப்போது நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி மிகவும் குறைந்துள்ளது. விபத்துக்கள் பாதிக்குப்பாதியாக குறைந்துள்ளன. அசுர வேகத்தில் பறக்கும் பேருந்து ஓட்டுனர்கள் அடக்கி வாசிக்கின்றனர்.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் தேவதூதா என கேட்கும் வகையில் ரிஷிராஜின் செயல்பாடுகள் மக்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. நல்ல விஷயம்தான்.. சரி, இதில் எங்கே சினிமா சம்பந்தப்படுகிறது என்கிறீர்களா?. இந்த மாற்றங்களை எல்லாம் கண்கூடாக பார்த்து ஆச்சர்யப்பட்ட மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது சமூக வலைதளப்பக்கத்தில், நீங்கள் தான் ரியல் ஹீரோ என்ற தலைப்பில் ஒரு பாராட்டுப்பத்திரமே வாசித்துள்ளார். மேலும் தான் எழுதிவரும் ஸ்கிரிப்ட்டில் ரிஷிராஜ் சிங்கை ஒரு ஹீரோ கதாபாத்திரமாகவும் சித்தரித்துள்ளாராம். ஒரு சூப்பர்ஸ்டாரின் மனதையே கொள்ளைகொண்டுவிட்ட போக்குவரத்து கமிஷனர் ரிஷிராஜ் சிங் உண்மையிலேயே ரியல் ஹீரோதான்.