விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியிடும் அதே நேரத்தில், டி.டி.எச் சேவை மூலமாக டி.வியிலும் ஒளிபரப்ப பலவகைகளில் முயற்சி செய்தார் கமல். ஆனால் அதற்கு தியேட்டர் அதிபர்களிடமிருந்து எதிர்ப்பு மேல் எதிர்ப்பு கிளம்பியது. அதை சமாளிப்பதற்குள் இன்னொரு பக்கம் மதரீதியாக பிரச்சனைகளை கிளம்ப, அதை எதிர்கொள்ளவே கமலுக்கு நேரம் சரியாக இருந்ததால் அப்போதைக்கு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டார் கமல்.
ஆனால் இந்தமுறை கமல் தனது முயற்சியில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. தற்போது விஸ்வரூபம்-2 கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. இந்தப்படத்தை டி.டி.எச் மூலம் பிரிமியர் ஷோவாக ஒளிபரப்பும் முடிவில் தீர்மானமாக இருக்கிறார் கமல். இதற்காக அதிரடியாக ஒரு முடிவு எடுத்துள்ள கமல், சமீபத்தில் பெங்களூரில் தான் கலந்துகொண்ட FICCI மீட்டிங்கில் கூட இதுபற்றி பேசியிருக்கிறார்.
இதுபற்றி கமல் சொல்லும்போது, “டி.டி.எச்சில் படத்தை வெளியிடுவது என்பது சினிமாவை எதிர்காலத்திற்கு கொண்டுசெல்லும் ஒரு முயற்சிதான். இதற்கு வசூலிக்கும் தொகை சற்று அதிகம் என்பதால் ஒரு குறிப்பிட்ட வட்டத்தினர் மட்டுமே இந்த முறையில் படம் பார்ப்பார்கள். மேலும் டி.வியில் படம் பார்த்த அவர்களையும் பெரியதிரையில் பார்க்கும் அனுபவத்திற்காக தியேட்ட்ர்களுக்கு இது இழுத்துவருமே தவிர, இதனால் சாதாரண ரசிகர்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்பது தவறான வாதம். மேலும் டி.டி.எச்சால் ஏற்படப்போவதாக இவர்கள் சொல்லும் குளறுபடிகளை கட்டுப்படுத்த நிறைய வழிகள் இருக்கின்றன. எல்லோருடைய வீட்டிலும் சமையலறை கட்டாயம் இருக்கும். ஆனால் அப்புறம் எப்படி ரெஸ்டாரண்டுகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதற்காக வீட்டில் சமைக்காமல் இருக்கிறோமா என்ன?. இந்த நல்ல திட்டத்தை விஸ்வரூபம்-2வில் கண்டிப்பாக பயன்படுத்தப் போகிறேன். இங்கே இந்தியாவில் மறுத்தால், யு.எஸ்ஸில் ஒளிபரப்புவேன்”என தீர்க்கமாக கூறியுள்ளார் கமல்.