ஹோட்டலையும் சமையலையும் வைத்து இரண்டுமணி நேரம் சினிமாவாக எடுக்கமுடியுமா? முடியும் என மலையாளத்தில் அழகாக நிரூபித்துக் காட்டியிருந்தார் இயக்குனர் அன்வர் ரஷீத். அந்தப்படம்தான் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்து கடந்த வருடம் மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற உஸ்தாத் ஹோட்டல். இந்தப்படத்தில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான நட்பையும் அதற்கிடையே அழகான ஒரு காதலையும் வைத்து சூப்பர்ஹிட் படமாக இயக்கியிருந்தார் அன்வர் ரஷீத்.
தேசியவிருது உட்பட பலவிருதுகளைப் பெற்ற இந்தப்படத்தை இப்போது தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறார் இந்தப்படத்தின் தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீஃபன். ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ட்ராஃபிக் படத்தையும் பின்னர் அதன் ரீமேக்காக தமிழில் வெளியான சென்னையில் ஒருநாள் படத்தையும் தயாரித்தவர்தான் இந்த லிஸ்டின் ஸ்டீபன்.
துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் விக்ரம் பிரபு நடிக்கிறார். இந்தப்படத்தை ஏன் ரீமேக் செய்கிறீர்கள் என தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீஃபனிடம் கேட்டால், “‘உஸ்தாத் ஹோட்டல் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் ஒரு அருமையான கதை. அது தமிழுக்கு இன்னும் சரியாக பொருந்தும் என்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது.