நடிகர்கள் : பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, முகேஷ், தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம்
இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி
ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசுவாமி
இயக்கம் : ராம் சங்கையா
தயாரிப்பு : பிரின்ஸ் பிக்சர்ஸ் – எஸ்.லக்ஷ்மன் குமார்
தேனி மாவட்டத்தில் உள்ள கிடாரிப்பட்டியை சேர்ந்த மூதாட்டி ரோகினி காணாமல் போக, அவரை தேடும் முயற்சியில் இறங்கும் போலீஸ் கான்ஸ்டபிள் பசுபதி, ரோகினியின் இறுதிச் சடங்கு வரை உடன் இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார். இதற்கிடையே ரோகினி உடையில் இருந்த தங்கட்டி காணாமல் போகிறது. அதை கண்டுபிடித்து கொடுக்க வேண்டிய பொறுப்பையும் பசுபதி ஏற்றுக்கொள்ள, தங்கட்டியை கண்டுபிடித்து கொடுத்தாரா, தங்கட்டி எப்படி மாயமானது, ரோகிணி ஏன் காணாமல் போனார், கண்டுபிடிக்கப்பட்டவர் எப்படி இறந்தார், என்ற ரீதியில் நகரும் கதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக பயணித்தாலும், இறுதியில் அழகான ஒரு காதல் கதையோடு முடிகிறது.
தங்கப்பொண்ணு என்ற கதாபாத்திரத்தில் மூதாட்டியாக நடித்திருக்கும் ரோகிணி, தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். உயிருடன் இருக்கும் போது, உயிரிழந்த உடலாக இருக்கும் போதும் தனது வேலை சரியாக செய்து ரசிகர்கள் மனதில் நிற்கிறார்.
போலீஸ் கான்ஸ்டபிள் சுப்பிரமணி வேடத்தில் நடித்திருக்கும் பசுபதி, மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார். காணாமல் போன ரோகிணியை கண்டுபிடிப்பதற்காக கதைக்குள் வருபவர், ரோகிணி இறுதி சடங்கு வரை உடனிருக்க வேண்டிய சூழலில் சிக்கிக்கொண்டு தவிப்பதும், கிடாரிப்பட்டி ஊர் மக்களால் விழி பிதுங்கி நிற்பதும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.
இளம் வயது ரோகிணியாக நடித்திருக்கும் அம்மு அபிராமியின் காதல் கதை மனதை கனக்க செய்யும் வகையில் இருப்பதோடு, ரசிகர்கள் மனதில் அழுத்தமாகவும் பதிந்து விடுகிறது.
ரோகினியின் குடிகார மகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, தனது கதாபாத்திரத்தை கவனமாக கையாண்டு கவனம் ஈர்த்தாலும், சில இடங்களில் தேனி மாவட்ட வசன உச்சரிப்பை தவற விட்டுவிடுகிறார். இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
ரோகிணியின் மகள்களாக நடித்திருக்கும் தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோர் நடிகர்களாக அல்லாமல் கிடாரிப்பட்டி கிராத்து பெண்களாக கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு கிராமத்து சடங்குகளையும், கிராமத்து மக்களையும் இயல்பாக படமாக்கியிருப்பதோடு, நம்மை கதைக்களத்தில் பயணிக்க வைக்கிறது.
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாள சிவா தண்டட்டியை சுற்றி நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாக நகரும் வகையில் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.
தண்டட்டியை மையமாக வைத்து எழுதிய கதையை நகைச்சுவையாக நகர்த்தி சென்றாலும், அதனுள் உணர்ச்சிக்கரமான இரண்டு காதல் கதைகளை மிக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம் சங்கையா.
துக்க வீடு மற்றும் அங்கு நடக்கும் சடங்குகள், அங்கிருக்கும் மக்களின் மனநிலை மற்றும் உறவினர்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள் ஆகியவற்றை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராம் சங்கையா, ஒப்பாரி பாட்டிகளை படம் முழுவதும் காட்டியிருப்பதோடு, அவர்களை வைத்துக்கொண்டே ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது. அதிலும், பசுபதியை கலாய்த்து தள்ளும் கோளாறு பாட்டியால் ஒட்டு மொத்த திரையரங்கமே சிரிப்பால் அதிர்கிறது.
கிடாரிப்பட்டி கிராம மக்களாக நடித்திருக்கும் துணை நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், சொத்துக்காக மகள்கள் போடும் சண்டை, ரோகினியின் அடையாளங்களில் ஒன்றான தண்டட்டிக்கு பின்னால் இருக்கும் உணர்வுப்பூர்வமான காதல் கதை, இவை அனைத்தையும் எதார்த்தமாகவும் அதே சமயம் விறுவிறுப்பாக நகர்த்தி சென்று படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கும் இயக்குநர் ராம் சங்கையா, இறுதியில் காதல் மூலம் நம்மை கண்கலங்க வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில், மகிழ்ச்சியாக பார்க்க கூடிய ஒரு ஜனரஞ்சகமான மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக மட்டும் இன்றி, சினிமா ரசிகர்கள் கொண்டாடும் தரமான படைப்பாகவும் இந்த ‘தண்டட்டி’ இருக்கிறது.
ரேட்டிங் 4/5
Comments are closed.