நடிகர்கள் : வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன்
இசை : விஜய் சித்தார்த்
ஒளிப்பதிவு : ஏ.எம்.எட்வின் சகே
இயக்கம் : தருண் தேஜா
தயாரிப்பு : பி.வி.எஸ்.என்.பிரசாத், பாபிநீடு.பி
லண்டனில் இருக்கும் தீவு ஒன்றில் உள்ள ஆடம்பரமான பங்களாவில் பல அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வீடு மற்றும், அதன் முழு விபரங்களை வீடியோ படமாக எடுக்கும் பணிக்காக நாயகன் வசந்த் ரவி உள்ளிட்ட ஐந்து பேர் செல்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் அமானுஷ்ய பாதிப்புகளும், அதன் பின்னணியும் தான் ‘அஸ்வின்ஸ்’.
நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, அமானுஷ்ய பங்களாவில் நடக்கும் பயங்கரமான சம்பவங்களை தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார். அவருடைய ஒவ்வொரு அசைவும், பயம் கலந்த கண்களும் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறது. வசனம் அதிகம் இல்லை என்றாலும், நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கும் வசந்த் ரவி, படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.
சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருந்தாலும், பயப்படுவதை மட்டுமே படம் முழுவதும் செய்திருக்கிறார்கள்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன், மீண்டும் பேயாக நம்மை மிரட்ட முயற்சித்திருக்கிறார். அவரது உயரம் மற்றும் உருவம் பேய் மேக்கப்பிற்கு பொருத்தமாக இருந்தாலும், சில இடங்களில் அவருடைய நடிப்பு ஓவர் டோஸாக இருக்கிறது.
திகில் படத்திற்கு ஏற்றபடி காட்சிகளை கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே, குறைவான வெளிச்சத்தில் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், சச்சின் மற்றும் ஹரி ஆகியோரது ஒலிக்கலவையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. இவர்கள் இருவரின் உழைப்பு தான் படத்தின் முதல் ஹீரோ என்றே சொல்லலாம்.
கதை லண்டனில் நடப்பது போல் எழுதியிருக்கும் தருண் தேஜா, வித்தியாசமான களங்கள் மூலம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், ஒரு வீட்டுக்குள் நடக்கும் இந்த கதையை இங்கே படமாக்கி செலவை குறைத்திருக்கலாம்.
அஸ்வினி கடவுள்கள் பற்றிய புராண கதை ஒன்றை அடிப்படையாக கொண்டு வழக்கமான திகில் பட பாணியில் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் தருண் தேஜா, ஒலிக்கலவை மூலம் சற்று மிரட்டியிருக்கிறார். ஆனால், அந்த மிரட்டல் ஆரம்ப காட்சியோடு அடங்கி விடுகிறது. அதன் பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் நம்மை கடுப்பேற்ற செய்கிறது.
ரேட்டிங் 3/5
Comments are closed.