
தெருக்கூத்துக்காரர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை பதிவு பண்ண முயற்சித்திருக்கும் படம் தான் ‘தாரை தப்பட்டை’..
காசுக்காக இசையை விற்காத தெருக்கூத்து கலைஞன் ஜி.எம்.குமார். அவரது மகன் சசிகுமார் அதில் சில மாற்றங்கள் செய்து, அதேசமயம் பாரம்பரியம் மீறாமல் தெருக்கூத்து கச்சேரிகள் நடத்தி வருகிறார். அவரது குழுவில் இருக்கும் ஆட்டக்காரிகளில் ஒருவரான வரலட்சுமி, சசிகுமாரின் மேல் பைத்தியமாக இருக்கிறார்.. கலையை ரசிக்காமல் காமக்கண்களோடு ஆசைக்கு அழைப்பவர்களுக்கு பத்ரகாளியாக இருக்கிறார்.
இந்தநிலையில் அந்த ஊரை சேர்ந்த சாதுப்பசுவான ஆர்.கே.சுரேஷ் வரலட்சுமியை திருமணம் செய்ய விரும்பி வரலட்சுமியின் தாயாரிடமும் சசிகுமாரிடமும் ஒப்புதல் பெற, வேறு வழியின்றி விருப்பமில்லாமல் சுரேஷை திருமணம் செய்கிறார்.. வரலட்சுமி இல்லாததால் கச்சேரிகள் ஒப்பந்தமாவதும் குறைகிறது.. கலைஞர்கள் வெவ்வேறு குழுக்களுக்கு இடம்பெயர்வதுடன் கலையில் ஆபாசத்தையும் புகுத்துகிறார்கள்.
இந்நிலையில் வரலட்சுமியின் தாய், சசிகுமாரிடம் தனது மகள் எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை என புலம்புகிறார். வரலட்சுமியை தேடி கிளம்பும் சசிகுமாருக்கு, அவளது கணவன் சுரேஷின் கொடூர முகமும் அவனது தொழிலும், வரலட்சுமியின் தற்போதைய அவல நிலையும் தெரிய வருகிறது. முடிவு என்ன ஆனது என்பதை திரையில் பார்த்து தெரிந்துகொள்வதே சிறந்தது.
இன்று கரகாட்டம், தெருக்கூத்து ஆகிய கலைகள் எப்படி அழிந்து வருகின்றன. அந்த கலைஞர்களுக்கு சமூகத்தில் என்ன விதமான மரியாதை தரப்படுகிறது என்பதை விலாவாரியாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் பாலா.. தவில், நாதஸ்வர கலைஞராக சசிகுமார் புதிய பரிமாணம் பெற்றிருப்பது வித்தியாசமாக இருக்கிறது.. அவரது கடின உழைப்பு நன்றாகவே வெளிப்படுகிறது.
அட. வரலட்சுமியா இது..? திருஷ்டி சுற்றிப்போட வேண்டும் அவருக்கு.. ஆட்டக்காரி சூறாவளியாக ஆட்டத்தில் மட்டுமல்லாமல், தண்ணியடிப்பது, இச்சைக்கு அழைத்தவனை தூக்கிப்போட்டு மிதிப்பது, மாமனிடம் நெளிவது குழைவது, காட்டுமிராண்டி கணவனிடம் சிக்கி சீரழிவது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக நடிப்பில் மாற்றம் காட்டி சபாஷ் பெறுகிறார்.
தமிழ் சினிமாவுக்கு புதிய வில்லனாக ஆர்.கே.சுரேஷ் கிடைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.. ஆரம்பத்தில் அப்பாவியாக தோற்றம் காட்டி, பின்னர் அடப்பாவி என சொல்லவைக்கிறார். ஜி.எம்.குமாரின் ரோஷம் கலந்த தன்மானம் மிடுக்கு. சசிகுமாரின் குழுவில் இருக்கும் அமுதவாணன் உட்பட அனைவரும் தங்களது பங்களிப்பை நிறைவாக அளித்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை படம் நெடுக துள்ளலுடன் பயணித்தாலும் அதன் ஊடே இழையோடும் வழியையும் சரியாக மனதில் பதிய வைத்திருக்கிறது. செழியனின் ஒளிபதிவு நாம் பார்க்காத ஒரு கிராமத்தை நமக்கு காட்டுகிறது.
நான் இப்படித்தான் படம் எடுப்பேன் என்கிற பாலாவின் பிடிவாதமும் கர்வமும் இதிலும் தொடர்கிறது. அதுவே படத்திற்கு பலமும் பலவீனமும் கூட. உணர்வுப்பூர்வமான. நெகிழ வைக்கும் காட்சிகளுக்கு பஞ்சமில்லாத இந்த ‘தாரை தப்பட்டை’, ஒருமுறை இந்தப்படத்தை பார்த்தால் தான் என்ன என்கிற எண்ணத்தை ஏற்படுத்தவே செய்கிறது.
Comments are closed.