
கடலூரில் இருக்கும் பிரபல தாதா மதுசூதனன் கொலை செய்யப்படுகிறார்.. இந்த கொலையை செய்தது யார் என அதற்கு வாய்ப்புள்ள, விஷால், அவரது அண்ணன், அவரது நண்பர்கள் என பலரையும் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவருகிறது போலீஸ்.. இதில் அந்த தாதாவிடம் வேலை பார்த்த நண்பன் ஒருவன், தவறாக புரிந்துகொண்டு விஷாலை போலீஸில் மாட்டி விடுகிறான்.
ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் இறந்துபோன தாதாவின் ஆட்கள் என இரண்டு தரப்பும் விஷாலை டார்கெட் பண்ணுகின்றனர்.. விஷாலின் குடும்பத்தினரோ உயிருக்கு பயந்து ஊர் ஊராய் சுற்றுகின்றனர். இன்னும் சில தினங்களில் திருமணம் செய்துகொள்ளப்போகும் விஷால் இந்த சந்தேக வளையத்தில் எப்படி சிக்கினார்..? அதிலிருந்து அவரால் மீள முடிந்ததா என்பதை மொத்தப்படத்திலும் பார்ட் பார்ட்டாக விவரிக்கிறார்கள்.
ஆடி மாசம் வந்தால் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது போல, விஷாலுக்கு ரெகுலரான ரெடிமேட் ஆக்சன் ரோல் தான். ஆனால் திரைக்கதையின் போக்கினால் அடக்கி வாசித்து இருக்கிறார் விஷால். கேத்தரின் தெரசாவுடன் காதல், ரவுடியுடன் வம்பு, பணம் சம்பாதிக்க வெளிநாட்டு பயணம், கல்யாணத்துக்காக ரிட்டர்ன் என நார்மலாக பயணிக்கும் விஷால், போலீசுக்கும் ரவுடிக்கும் சிண்டு முடிய கிளைமாக்ஸில் ஆடும் கதகளி’ சூப்பர்.
நாயகியான கேத்தரின் தெரசாவுக்கும் விஷாலுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. வழக்கமாக வில்லத்தனம் காட்டும் மைம் கோபி, இதில் விஷாலின் பாசமிகு அண்ணனாக புரமோஷன் ஆகியுள்ளார். தாதா மதுசூதனன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் ரவி, கருணாஸ், இமான் அண்ணாச்சி என அனைவருக்கும் பளிச் கேரக்டர்கள் தான்..
ஒரு கொலையில் அப்பாவியான விஷாலை மாட்டி சுத்தலில் விட்டு, கடைசியில் அடப்பாவி இவரா அந்த கொலையை செய்தது என பாண்டிராஜ் வைத்திருக்கும் ட்விஸ்ட் பிரமாதம்.. ஆனால் அதற்காக திரைக்கதையை கொஞ்சம் நீட்டி முழக்கியிருப்பது தான் சற்றே அயர்ச்சியை தருகிறது. இருந்தாலும் இடைவேளைக்குப்பின் ஆடியன்ஸை ஒரு பரபரப்பிலேயே வைத்திருப்பதில் பாண்டிராஜ் ஓரளவு ஜெயித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
Comments are closed.