தீபாவளி பண்டிகை எவ்வளவு உற்சாகத்தை தருகிறதோ, அதே அளவு மிகுந்த கவனத்துடன் கொண்டாட வேண்டியதும் அவசியமான ஒன்று. குறிப்பாக குழந்தைகளுக்கு பட்டாசு என்றால் உயிர். ஆனால் ஒரு சிறிய கவனக்குறைவு கூட அவர்களது உயிருக்கே ஆபத்தைக் கொண்டுவந்து விடும். அதனால் தீபாவளி தினத்தன்று குழந்தைகளை கவனமாக பட்டாசு வெடிக்க வைத்து கொண்டாடி மகிழுங்கள். இந்த விஷயத்தைத்தான் அப்படியே நடிகர் சூர்யா நடிக்க இரண்டு நிமிட விழிப்புணர்வு படமாக எடுத்திருக்கிறார்கள்.
பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த குறும்படத்தை தயாரித்துள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்பதால் இதற்காக ஒரு பைசா கூட வாங்காமல் இலவசமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் சூர்யா. இன்னும் சில தினங்களில் இருந்து உங்கள் வீட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் சூர்யா சொல்லும் அறிவுரையை கேட்க தயாராகுங்கள்.