ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்க்கையில் ரசிகர்கள் அவரை இன்றும் நினைவு வைத்திருக்கும் முக்கியமான படம் என்றால் அது 1982ல் வெளியான ‘மூன்றாம் பிறை’ படமாகத்தான் இருக்கும். பாலுமகேந்திரா இயக்கிய இந்தப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. அதுமட்டுமல்ல பழைய நினைவுகளை மறந்துவிட்ட ஒரு பெண்ணாக, தனது குழந்தைத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் ஸ்ரீதேவி. இந்தப்படம் மீண்டும் கமல், ஸ்ரீதேவி நடிக்க ‘சதாமா’ என்ற பெயரில் ரீமேக்காகி இந்தியிலும் ஏன் வெளிநாட்டிலும்கூட ஸ்ரீதேவிக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தது.
ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெயரும் கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் மகன் ஷாங்கி இயக்கும் படத்தில் இப்போது நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஆனால் இது சினிமா அல்ல.. அமெரிக்காவில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எடுக்கப்படிருக்கும் டாக்குமெண்ட்ரி படம். இதில் சில ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். கருத்தம்மா, உல்லாசம் உட்பட பல தமிழ்ப்படங்களில் கதாநாயகியாக நடித்த, ஸ்ரீதேவியின் சகோதரியான மகேஸ்வரியும் இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.