கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இரண்டு படங்களிலும் கிராமத்துப் பையனாக நடித்திருந்த சிவகார்த்திகேயன், தற்போது நடித்துவரும் ‘மான் கராத்தே’ படத்தில் பீட்டர் என்ற நகரத்து வாலிபனாக நடிக்கிறார். இதற்காக தனது ஹேர்ஸ்டைல், நடை, உடை எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். காரணம் இந்தப்படத்தின் பீட்டர் கேரக்டர் அதையெல்லாம் பிரதிபலிக்கிறதாம்.
படத்தில் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், சிவகார்த்திகேயன் ஊர் சுற்றுவது எல்லாம் காஸ்ட்லியான பைக்கில்தான். வெளியே கிளம்பும்போது அணிவது எல்லாம் மாடர்னான உடைகள்தான். அதனால் இந்த கேரக்டரை அனுபவித்து நடிப்பதாக கூறுகிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்ஷிகா நடிக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை எழுத அவரது சிஷ்யரான திருக்குமரன் இந்தப்படத்தை இயக்குகிறார். எதிர்நீச்சல் மூலம் சிவகார்த்திகேயனுக்கு சூப்ப்ர்ஹிட் பாடல்களை தந்த அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். நாசரும், ‘துப்பாக்கி’ வில்லன் வித்யுத் ஜாம்வாலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ.ஆர்.முருகதஸும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்.