பிரிந்தது சூர்யா-கௌதம் மேனன் கூட்டணி

39

வருத்தமான செய்திதான். ஆனால் எது நடக்கக்கூடாது என எதிர்பார்த்தோமோ அது நடந்து விட்டதே.. சூர்யாவும் கௌதம் மேனனும் பிரிந்துவிட்டார்களே… இதுவரை அரசல் புரசலாக இருந்த இந்த விஷயத்தை இப்போது தனது அறிக்கையின் மூலம் தெளிவாக்கிவிட்டார் சூர்யா. சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் காக்க காக்க, ‘வாரணம் ஆயிரம்’ என மறக்க முடியாத இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். அதிலும் சூர்யா வளர்ந்துவந்த நேரத்தில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படம், சூர்யா சினிமாவின் இன்னொரு தளத்தில் அடியெடுத்து வைக்கவும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறவும் உதவியதை மறக்க முடியாது.

சில மாதங்களுக்கு முன் சூர்யா நடிக்க துருவ நட்சத்திரம் என்ற படத்திற்கு பூஜை போட்டார் கௌதம். ஆனால் படம் வளர்வதாக தெரியவில்லை. என்ன பிரசனை என்று புரியாமல் குழம்பியவர்களுக்கு இப்போது தனது அறிக்கையின் மூலம் உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்தி இருகிறார் சூர்யா. அவரது வேதனையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது அவரது அறிக்கை.

“கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் திரு.கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இயக்கம் மற்றும் தயாரிப்பில், நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது. இது அனைவரும் அறிந்த செய்தி. பல்வேறு காரணங்களால் நாங்கள் இருவரும் இப்போது இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.என்னுடைய திரையுலக அனுபவத்தின் அடிப்படையில், நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே, படப்பிடிப்பு செல்வது என்பதை கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன்.

இயக்குனர் கௌதம் அவர்களிடம் என்னுடைய இந்த கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச் சொல்லி அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம். ஆனால், ஒப்பந்தம் செய்து ஒரு வருட காலம் கழிந்த பிறகும், கௌதம் அவர்கள் இன்னும் முழு கதையை என்னிடம் திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.

‘சிங்கம் -2’ படம் முடிந்த பிறகு ஆறு மாதங்களாக முழு கதையையும் எதிர்பார்த்து காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டு விடலாம் என்றார். நட்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். ஒரு டெஸ்ட் ஷுட் செய்து கெட்டப் மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும், கௌதம் அவர்கள் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். பல மாதங்களாக ஷுட்டிங் போகாமல் வீட்டில் காத்திருக்கிறேன். கௌதம் அவர்களிடமிருந்து, நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக்கதை கிடைக்கும் என்று இன்றுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை.

முன்பே, கௌதம் அவர்களின் ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ படத்திற்கு பூஜை போட்டு, ஒரு வாரம் மட்டும் ஷுட்டிங் செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும் கடைசியில் அந்த படம் நடக்கவில்லை. இப்போது இந்த படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து ஏற்படுகிறது. ஆறு மாத கால காத்திருத்தலுக்குப் பிறகு, இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நானும், கௌதம் அவர்களும், கருத்தளவிலும் எதிரெதில் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது. இந்த நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன்.

ஒரு திரைப்படம் உருவாவதில், பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது. நடிகனாக நம்பிக்கை இல்லாமல் செய்த படங்கள், எனக்கு சரியான பாடங்களைத் தந்திருக்கின்றன. நட்பின் அடிப்படையில் கௌதம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டேன். இனி, நாங்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால், கௌதம் அவர்களின் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அந்த அறிக்கையில் வருத்தத்துடன் தனது மனக்குமுறலை தெரிவித்துள்ளார் சூர்யா.

கௌதம் மேனன் அஜீத்தை வைத்து ‘துப்பறியும் ஆனந்த்’ படத்தை இயக்குவதாக இருந்து ஒரு கட்டத்தில் அது ட்ராப் ஆனது. அதேபோல விஜய்யை வைத்து ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ என்ற படத்தை ஆரம்பித்தார். ஆனால் அதிலிருந்து விஜய்யும் விலகிக்கொண்டார். இப்படி டாப்ஸ்டார்கள் மூன்றுபேருமே இவர் டைரக்ஷனில் நடிக்க ஆர்வப்பட்டு வந்து, படம் ஆரம்பிக்கும் முன்னரே விலகிக்கொள்ள காரணம் இவர் யாரிடமும் முழுக்கதையை கூறவில்லை என்பதுதான். அதுசரி அப்படி ஒன்று இருந்தால்தானே என்கிறீர்களா?

இன்று நிலவுகின்ற போட்டியான சூழலில், தனது படங்கள் வரிசையாக ஃப்ளாப் ஆகிவரும் இந்த நேரத்தில் கௌதம் மேனனை நம்பி பெரிய ஹீரோக்கள் வருவது என்பது அதிசயமான ஒன்று. ஆனால் அப்படி வந்த வாய்ப்பை கோட்டை விட்டிருப்பது யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது போலத்தான் (அவசரத்துக்கு வேற உதாரணம் கிடைக்கலீங்க). கௌதம் சார்.. சூப்பர்ஸ்டார் ரஜினி எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷனில் 26 படங்களில் நடித்திருக்கிறார் என்பதையும் இதே சூர்யா டைரக்டர் ஹரியுடன் நான்கு படங்கள் தொடர்ந்து பண்ணிவிட்டார் என்பதையும் தாங்கள் ஒருமுறை யோசித்து பார்ப்பது நல்லது.

Leave A Reply

Your email address will not be published.