மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” என்பதை வலியுறுத்தி , நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார். அதற்கேற்ப தனது அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில் மாற்றி விட்டதாகவும், இதைத் தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையொப்பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு நிகழ்வினை துவங்க உள்ளேன் என தெரிவித்தார்.
இந்த வருடம் 2018 ஜீன் மாதம் 30ம் நாள் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின், மெட்ரோபிலக்ஸ் தமிழ்ச்சங்கம் இணைந்து 31வது தமிழர் திருவிழாவில் உலகிற்கே தலைமொழியான தமிழில் கையெழுத்திடுவது எனும் முழக்கத்தை துவங்கி 1119 பேர் ஒன்றிணைந்து தமிழில் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது, இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, ஆரியின் வேண்டுகோளுக்கு இணங்கி தம் கையெழுத்தையும் உலக சாதனைக்காக தமிழில் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தமிழகம் வந்தவுடன் ஆரி முதல் கடமையாக வங்கியில் தனது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழில் மாற்றி தாய்மொழியில் கையெழுத்திடுவோம் என்று தமிழகம் முழுக்க பரப்புரை செய்யும் முயற்சியாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த துவங்கினார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆரி, “என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை. என்றும் தமிழ் மொழியை முன்னிறுத்தி பேசும் அரசியல்வாதிகளும் மற்றும் நடிகர்களும் இனி தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம் என்றவர் நாம் இந்த உலகில் எந்த மூலையில் சென்றாலும் நம்முடன் எப்போதும் வருவது நம் தாய் மொழியே” என்றார்.
இதனை ஏற்றுக்கொண்ட பாடலாசிரியர் “ழ” புகழ் திரு. நீலகண்டன், மாணவர்கள், நடிகர்கள் சௌந்தரராஜன், பிளாக் பாண்டி, விஷ்ணுப்பிரியன், எழுத்தாளர் ஜெயபாலன் ஆகியோர் தங்களது கையெழுத்தை தமிழில் மாற்றுவதாக அறிவித்து கையொப்பமிட்டனர்.

Comments are closed.